தினமலர் 16.12.2013
மக்களை கவர மாநகராட்சி தெருத்தெருவாக சென்று குறைகளை கண்டறிய உத்தரவு
சென்னை: சென்னையில் அனைத்துமண்டலங்களிலும், வட்டார துணை கமிஷனர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், தெருத்தெருவாக சென்று, அந்த பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை கண்டறிந்து பட்டியலிடவும், சிறுசிறு குறைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் எனவும், மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், 15மண்டலங்கள் உள்ளன. அவை, வடக்கு, தெற்கு, மத்தியம் என, மூன்று நிர்வாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிர்வாக மண்டலத்திற்கும் பொறுப்பாக, துணை கமிஷனர் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நேரில் சென்று…
அவர்கள் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து, சென்னையில் ஒவ்வொரு தெருவிலும் என்னென்ன குறைகள் உள்ளன; மக்களுக்கான அடிப்படை தேவைகள் என்ன என்று, கண்டறிய மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.அதன்படி, வார்டு வார்டாக, அனைத்?து தெருக்களுக்கும் அந்த அதிகாரிகள் குழு நேரில் சென்று, சாலைகளின் தரம், தெருவிளக்கு, நடைபாதைகளின் நிலை, மழைநீர் வடிகால்வாய், குடிநீர், கழிவுநீர் பிரச்னை, குப்பை சேகரிப்பு கூடங்களின் நிலை, அந்த தெருவில் உள்ள மாநகராட்சி கட்டடங்களின் நிலை, அங்கு கிடைக்கும் சேவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யும்.
சிறப்பு திட்டங்கள்
அதில் காணப்படும் குறைபாடுகள் பட்டியலாக தயாரிக்கப்படும் இவ்வாறு, தெரு வாரியாக குறைபாடுகளை பட்டியலிட்டு, அவற்றில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனுக்குடன் பணியாளர்களை கொண்டு சரிசெய்யவும், மற்றபடி மக்களின் தேவைகளை, முறையான ஒப்பந்தம் மூலம் செய்து தரவும் வட்டார துணை கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரும் மார்ச் மாதம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இது குறித்து மேயர், கமிஷனர் தலைமையில் ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டு ள்ளன.அறிவிப்புகளை தவிர, மக்களின் தேவைகளை களத்திற்கு சென்று அறிந்தால் தான், சில பணிகளை மேற்கொள்ள, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க முடியும். இதற்காகவே துணைகமிஷனர்கள் தலைமையில் தெருத்தெருவாக சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
‘கவுன்சிலர்களால் முடியாது’
நாளொன்றுக்கு எத்தனை தெருக்கள் அதிகமாக ஆய்வு செய்ய முடியுமோ செய்து, மூன்று மாதங்களில் இப்பணியை நிறைவேற்ற ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.வழக்கமாக, இந்த பணிகளை, கவுன்சிலர்களை கொண்டு தான் செய்ய வேண்டும். கவுன்சிலர்கள் முழு ஈடுபாட்டுடன் செய்வதில்லை என்பதால், அதிகாரிகள் குழு களம் இறங்க உள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.தெருத்தெருவாக சென்று மக்கள் குறைகளை கண்டறியும் பணி, மார்ச் மாத பட்ஜெட்டை கருத்தில் கொண்டு தான் என, மாநகராட்சி தரப்பில் கூறப் பட்டாலும், லோக்சபா தேர்தல் நெருங்குவதால், மக்களை கவர மாநகராட்சி இந்த வியூகத்தை வகுத்துள்ளதாகவே தெரிகிறது.