தினமணி 05.05.2010
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி
புதுக்கோட்டை, மே 4: புதுக்கோட்டையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 1872 –ல் முதலாவதாக தொடங்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியானது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
நிகழாண்டில் இப்பணி மேற்கொள்ளப்படும் நிலையில், இப்பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளைச் சேர்ந்த 133 ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 139 பேர் பயிற்சி பெற்றனர்.
பயிற்சிக்கு, நகராட்சி நகர்நல அலுவலர் ராம்கணேஷ் தலைமை வகித்தார். பயிற்சியை அவர் தொடக்கிவைத்தார். துணை வட்டாட்சியர் சி.. ஸ்டாலின், தலைமை நில அளவையாளர் கே. குமாரசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். கணக்கெடுப்பின்போது மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் குறித்து விடியோ மூலம் விளக்கமளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை, பயிற்சி உதவியாளர் இ.கே. சம்சுதீன், இளநிலை உதவியாளர் எஸ். சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.