தினகரன் 02.06.2010
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியது தகவல் அளிக்க மறுப்பது குற்றம்
சென்னை, ஜூன் 2: “கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தகவல் அளிக்க மறுப்பது குற்றம். அதற்கு தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது” என்று தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இதுதொடர்பாக, சென்னையில் அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, இரண்டு கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள் ளது. முதற்கட்டமாக, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி இன்று முதல் ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்டமாக 2011ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இந்தியாவின் எல்லைக்குள் இருக்கும் அனைவரது விவரமும் சேகரிக்கப்படும். இதில் இலங்கை, பர்மா அகதிகளும் இடம் பெறுவார்கள். எந்த கட்டிடமும், பகுதிகளும் விடுபடக் கூடாது என்பதற்தாக செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தின் வரை படங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணிக்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வரும் பணியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை மற்றும் கட்டாயமாகும். பொதுமக்கள் தகவல் அளிக்க மறுத்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். அவர்களுக்கு தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்த தகவல்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன், அவை அனைத்தும் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, 2011ம் ஆண்டு முதல் ‘தேசிய அடையாள அட்டை’ வழங்கும் பணி நடைபெறும். எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்து முடிக்க, அனைவரும் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 3450 111 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
வருவாய் நிர்வாக ஆணையர் சுந்தரதேவன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஒப்புதல் சீட்டை பாதுகாப்பது முக்கியம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள், தங்களது அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டிருந்தால் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். வீடு பூட்டி இருந்தால் கணக்கெடுப்பு ஊழியர்கள் 45 நாட்களில் மீண்டும் ஏதாவது ஒரு நாள் வருவார்கள். ஊழியர்கள் வரும்போது வீட்டின் தலைவர் இல்லையென்றாலும், பொறுப்பான ஒருவர் பதில் கொடுத்தாலே போதுமானது. ஆண்டுக்கு 6 மாதத்துக்கு மேல் வசிக்கும் இடத்தைதான், தங்களது இருப்பிடமாக ஒருவர் தெரிவிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட வீட்டில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை சேகரித்த பின், அதற்கான ‘ஒப்புதல் சீட்டு’ (அக்னாலெஜ்மென்ட்) ஒன்றை ஊழியர்கள் கொடுப்பார்கள். அதை பொதுமக்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒப்புதல் சீட்டின் அடிப்படையில்தான் 2011ம் ஆண்டு 2ம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படம், கைரேகை, கண் இமை போன்ற தகவல் சேகரிக்கும் பணியும் நடைபெறும்.