தினமணி 31.05.2010
மக்கள்தொகை பணி கணக்கீட்டாளர்களுக்கு உபகரணங்கள் விநியோகம்
மதுரை, மே 30: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்குச் செல்லும் கணக்கீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை (45 நாள்களுக்கு) நடைபெற உள்ளது.
இப்பணிக்கு செல்லக்கூடிய கணக்கீட்டாளர்களுக்கு நான்கு மண்டலங்களில் காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, என்.எம்.எஸ். பள்ளி, வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 35 தலைமை பயிற்சியாளர்கள் மூலம் 2,500 கணக்கீட்டாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு 3.5.2010 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலும், வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கணக்கீட்டாளர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்குத் தேவையான 9 வகையான படிவங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இந்தப் பணி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர் விளம்பரம், டிஜிட்டல் விளம்பரப் பலகை, ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் விளம்பரம் செய்தல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு வரும் கணக்கீட்டாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.