தினகரன் 07.09.2010
மக்கள் எதிர்ப்பை மீறி மழைநீர் குழாய் அடைப்பு அகற்றம்
ஆவடி, செப். 7: ஆவடி நகராட்சி 18வது வார்டில் சங்கரர் நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீர் கல்லூரி சாலை வழியாக 17வது வார்டில் உள்ள சரஸ்வதி நகருக்கு குழாய் மூலம் செல்கிறது.
கடந்த ஒரு மாதமாக அடிக்கடி பெய்யும் மழையால், சங்கரர் நகர் பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இது, சரஸ்வதி நகர், வெற்றி நகர் பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டதால், அங்குள்ள வீடுகள், தெருக்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
சிலர், சங்கரர் நகர் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் குழாயை கல்லூரி சாலையில் மணல் கொட்டி அடைத்தனர். இதன் காரணமாக, சங்கரர் நகர் பகுதியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.
இதுகுறித்து, சங்கரர் நகர் பகுதி மக்கள், ஆவடி நகராட்சி தலைவர் விக்டரி மோகன், ஆணையாளர் ராமமூர்த்தி ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் முகிலன், சப் இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முருகன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை பொக்லைன் இயந்திரத்துடன் குழாய் அடைப்பை திறக்க வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 17வது வார்டு கவுன்சிலர் பசுபதி உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அடைக்கப்பட்டிருந்த குழாய் திறந்துவிடப்பட்டது. சங்கரர் நகர் பகுதியிலிருந்து சரஸ்வதி நகருக்கு மழைநீர் சென்றது.
சரஸ்வதி நகர் பகுதியினர் கூறுகையில், “குழாய் அடைப்பை திறந்து விட்டதால், எங்கள் பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுகின்றன.
இங்கு தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் இல்லாவிட்டால், கலெக்டரை சந்தித்து ரேஷன் கார்டு, அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.