தினமலர் 04.032010
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒருவர் கூட விடுபடக்கூடாது: இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ‘அட்வைஸ்‘
அணைக்கட்டு:மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள், ஒருவரைக்கூட கணக்கில் இருந்து விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்‘ என்று செயற்கைகோள் ஒளிப்பரப்பு மூலம் நடந்த பயிற்சியில் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்திய மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2001ல் கணக்கெடுக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. அதற்கு முன் ஏற்பாடாக நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.இந்த பணி ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக வருவாய் துறையினருக்கு பொறுப்பு பதிவேடு கையாளும் விதம் குறித்து பயிற்சியை செயற்கைகோள் வழியாக தமிழகம் முழுவதும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் சின்னதுரை, புவணேஸ்வரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:
கணக்கெடுப்பு பணி சரியாகவும், முறையாகவும் செய்ய வேண்டும். பணியில் ஈடுபடுபவர்கள் அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் கணக்கெடுப்பு குறித்து மக்களிடம் தெளிவாக கூறமுடியும். அவர்களும் புரிந்துகொண்டு, சரியான தகவல் அளிப்பார்கள்.கணக்கெடுப்பு பணி நடத்துவற்தகு முன்பு முதலில் கிராமம், நகரம், மாநகரம் என பிரிக்கவேண்டும்.
பின்னர் வார்டு வாரியாக 150 வீடுகள் அல்லது மக்கள் தொகையில் 750 என சூழ்நிலைக்கு ஏற்ப கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும்.மக்கள் தொகை கணக்கு எடுக்கும் போது ஒரு இடத்தில் ஆறு மாதத்திற்கு மேல் உள்ளவர்களை மட்டுமே சேர்த்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒருவர் கூட கணக்கெடுப்பில் இருந்து விடபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வள மையத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு, சென்னை மக்கள் தொகை கணக்கொடுப்பு அலுவலக முதுநிலை மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்தார். பிடிஓ., ரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், மண்டல துணைத் தாசில்தார் அன்பு, ஆர்ஐ.,க்கள் சுமதி, சேகர், பூமா, வி.ஏ.ஓ., ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிதம்பரநாதன் வரவேற்றார்.பயிற்சியில், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உள் வட்டத்தை சேர்ந்த விஏஓ., க்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய பயிற்றுநர்கள் பிரேம்குமார், ஜெயக்குமார், கண்ணியப்பன், மகேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் ஒளிப்பரப்பு பணிகளை செய்தனர்.விஏஓ., சிவகுமார் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வட்டார வள மைய பயிற்றுநர்கள் மற்றும் வருவாய் துறையினர் செய்திருந்தனர