தினமலர் 30.06.2010
மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் மொத்த குறிப்பேடு தயாரிப்பு பயற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் கிராமங்கள் மற்றும் நகரங்களின் விபரங்கள் அடங்கிய மொத்த குறிப்பேடு தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
பொள்ளாச்சி தாலுகாவில், ஒன்பது பேரூராட்சிகள், ஆச்சிபட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், கோவில்பாளையம் ஆகிய நான்கு சிறப்பு ஊராட்சிகள், 116 கிராம ஊராட்சிகள் மற்றும் 36 நகராட்சி வார்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.இதில், 175 கண்காணிப்பாளர்களும், ஆயிரத்து 118 பணியாளர்களும் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி தாலுகாவில் மொத்தம் ஆயிரத்து 293 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஜூன் முதல் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. வரும் ஜூலை 15ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடக்கும். பொள்ளாச்சி தாலுகாவில் இதுவரை 60 சதவீத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அடிப்படையாக கொண்டு, மொத்த குறிப்பேடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியுடன் குறிப்பேடு தயாரிக்கும் பணியும் துவங்கியுள்ளது.குறிப்பேடுகளை தயாரிப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளிலுள்ள கிராமங்களை சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள் முகாமில் பங்கேற்றனர். மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யும் ஒவ்வொரு தகவலும் முக்கியமானவை என்பதை உணர வேண்டும். இதனால், கணக்கெடுப்பாளர்களும், மே லாய்வு செய்யும் அதிகாரிகளும் தகவலை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும்.
கணக்கெடுப்பு விபரங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படவுள்ள மொத்த குறிப்பேட்டிலும் விபரங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக, கணக்கெடுப்பாளர்களுக்கு தனியாக படிவம் வழங்கப்பட்டுள்ளது.கிராமங்கள், நகரங்கள் என தனித்தனியாக மொத்த குறிப்பேடு தயாரிக்கப்படவுள்ளது. கிராமங்கள் குறித்த குறிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர்களும், நகரப்புறத்தை சேர்ந்த குறிப்பேட்டை நகரமைப்பு அதிகாரிகளும் தயார் செய்வர். படிவத்திலுள்ள விபரங்களை தெளிவாக புரிந்து, பதிவு செய்ய வேண்டும். சந்தேகம் ஏதேனும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.இவ்வாறு, ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பேசினார்.முகாமில், பொள்ளாச்சி தாசில்தார் வெங்கடேசன், கோட்ட புள்ளியியல் ஆய்வாளர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.