தினமலர் 09.08.2010
மக்காத பிளாஸ்டிக்கினால் கேடு!: தடை செய்வது அவசியம்
சேலம்: மறு சுழற்சிக்கும் பயன்படுத்த முடியாமல், நிலத்தடி நீரை பாழ்படுத்துவதுடன், மாநகராட்சி பகுதிகளில் செல்லும் சாக்கடைகளில் அடைப்பை ஏற்படுத்தி ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் “கப்‘ களை மாநகராட்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.சேலம் மாநகரை தூய்மைபடுத்த மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து, அதை அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பாரபட்சமின்றி ஒருமனதாக நிறைவேற்றம் செய்ய வேண்டும்.
தற்பொழுது மாநகரில் பல டீக்கடைகளில் பார்சல் டீ கொடுக்க பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்தி அதில் சுடச்சுட டீ ஊற்றி கொடுக்கின்றனர். அதனால், டீ குடிப்பவர்களுக்கு பல கெடுதலை ஏற்படுத்துகிறது. அதேபோல ஹோட்டல்களிலும் சாம்பார் வகைகளை பாலித்தீன் பைகளில் கட்டி கொடுக்கின்றனர். மழைக்காலங்களில் சாக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பை ஏற்படுத்தி, சாக்கடை தேங்கி மாநகராட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற தீங்குகளை தவிர்க்க பிளாஸ்டிக் பொருட்களின் கெடுதல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். பொது இடங்களில் நோட்டீஸ் கொடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏற்கனவே கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அவற்றை காலி செய்ய வலியுறுத்த வேண்டும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து பலசரக்கு கடைகள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள், குளிர்பானம் மற்றும் டீக்கடைகளில் மாநகராட்சியின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பதாக எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்கும் பணி நடக்க வேண்டும். மாநகராட்சி சார்பில், “இவ்விடம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதில்லை‘ என தட்டிகளை தயார் செய்து, ஒவ்வொரு கடைகளுக்கும் கொடுத்து அதை கடையின் முன் வைக்க சொல்ல வேண்டும்.ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து கெடு முடிந்தவுடன், மாநகராட்சி அதிகாரிகளை பல குழுக்களாக அமைத்து, அதிரடியாக பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். மீறி விற்பவர்கள் மீது அபராதம், உரிமம் ரத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு என்று பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.ஆய்வு என்றால் பஸ் ஸ்டாண்ட், டீ கடைகள் என்பதோடு நில்லாமல் மாநகரம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்தினால், தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லா ஒரு முன்னோடி மாநகராட்சியாக சேலம் திகழும். மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், கண்டிப்பாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.