தினமணி 09.02.2010
மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக்க மாநகராட்சி – இந்தியா சிமென்ட் நிறுவனம் ஒப்பந்தம்
திருநெல்வேலி, பிப். 8: திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரனும், சிமென்ட் ஆலையின் முதுநிலை துணைத் தலைவர் நந்தகுமாரும் திங்கள்கிழமை கையெழுத்திட்டனர்.
மேயர் அ.லெ. சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தப்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாநகராட்சியில் நாள்தோளும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் 1.4 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியா சிமென்ட் ஆலைக்கு இலவசமாக அளிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து மேயர் கூறியதாவது:
இம் மாநகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை தாழையூத்தில் உள்ள இந்தியா சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக வழங்க மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான தீர்மானம் மாநகராட்சியில் கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை சோதனை அடிப்படையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இப்போது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அந்த ஆலைக்கு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே பிரித்து எடுத்து ஆலைக்கு கொண்டு சென்று கொடுக்கும். ஒரு நாளைக்கு சுமார் 1.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இலவசமாகவே அளிக்கப்படும் என்றார் மேயர்.
முதுநிலை துணைத் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:
எங்கள் ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதனுடன் சேர்த்து இந்த மக்காத பிளாஸ்டிக் கழிவுகளும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். இதற்காக பல நவீன இயந்திரங்களை நிர்மாணித்துள்ளோம். பிளாஸ்டிக்கை சாதாரணமாக எரிப்பதால் உருவாக்கும் நச்சு வாயுக்கள், ஆலையில் சுமார் 1,400 டிகிரி வெப்பத்தில் எரிக்கப்படுவதால் அவற்றின் மூலக்கூறுகள் சிûதைக்கப்பட்டு காற்றில் எளிதில் கலந்துவிடும். எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
இதேபோல், கன்னியாகுமரி நகராட்சி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்தும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு சோதனை அடிப்படையில் எரிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியுடன் மட்டும்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளது என்றார் நந்தகுமார்.
மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், எஸ்.எஸ். மைதீன், பூ. சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.