தினத்தந்தி 11.07.2013
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
குப்பைகளை தரம் பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமையில் நடந்தது.
பயிற்சி முகாம்
திருச்சி மாநகராட்சியை சுத்தமாக வைக்க மக்கும் மற்றும் மக்காத குப்பையை
தரம்பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் மாநகராட்சி ஆணையர்
தண்டபாணி தலைமையில் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு ஆணையர் தலைமை தாங்கி
பேசினார்.
அவர் பேசியதாவது:–
தூய்மையான நகரமாக…
திருச்சி மாநகராட்சியை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு மாநகராட்சி
நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. திருச்சி
மாநகராட்சிக்கு உட்பட்ட 2500 தெருக்களில் இருந்து தினமும் 2 ஆயிரம்
துப்புரவு பணியாளர்களை கொண்டு 410 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத
குப்பைகளை பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்காகவும், மக்காத
குப்பைகளை விற்பனை பொருளாகவும் மாற்றிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மக்காத குப்பை
மக்கும், மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலே தரம் பிரித்து வீட்டு
உரிமையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம்
செய்து வருகிறது. மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தரம் பிரித்து
அரியமங்கலம் கோட்டத்தில் மாரியம்மன் கோவில் தெருவிலும், கோ.அபிஷேகபுரம்
கோட்டத்தில் வாமடம் பகுதியிலும், பொன்மலை கோட்டத்தில் பறவைகள் சாலையிலும்,
ஸ்ரீரங்கம் கோட்டத்தில் அம்பேத்கார் நகரிலும் உள்ள உலர் வள மையங்களில்
சேகரிக்கப்படுகிறது. அதிக அளவில் மக்காத குப்பைகளை சேகரிக்கும்
ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மக்கும் குப்பை
மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் முழுமையாக உரம் தயாரிக்க
பயன்படுத்தப்படும். திருச்சி மாநகராட்சி பகுதியில் 160 பகுதிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு
200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கப்படும்.
குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் மற்றும் மக்கும்
குப்பைகள் ஆரம்ப நிலையிலேயே பிரிக்கப்பட்டு தனித்தனியாக மாநகராட்சி
துப்புரவு பணியாளர்களால் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும்.
மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஆரம்ப நிலையிலேயே பிரிப்பதற்கு
பொதுமக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாநகராட்சி
அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு
தரவேண்டும். குப்பைகளை தெருவில் கொட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
முகாமில் நகர் நல அலுவலர்(பொறுப்பு) அல்லி, உதவி ஆணையர்கள் தயாநிதி,
தனபாலன், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், லட்சுமணமூர்த்தி, சுகாதார
ஆய்வாளர்கள் கூரத்தாழ்வார், பாண்டியராஜன், கார்த்திகேயன், இளங்கோவன்
மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து
கொண்டனர்.