தினமலர் 18.03.2010
மணம் வீசுமா மாநகராட்சி கழிப்பிடம்?
கோவை: கோவை மாநகராட்சி புதிய தொழில் நுட்பத்தால், மாநகராட்சி கழிப்பிடங்கள் மணம் வீசும் என சுகாதார துறை நம்புகிறது.
கோவை மாநகராட்சி நகர்நலத்துறை, நகரை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. பொதுக்கழிப்பிடங்களை நவீனப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில், முதல் டிராக்கில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை நவீனப்படுத்தியுள்ளது.சாதாரண முறையில் இயங்கிய கழிப்பிடம், ‘ஓசோனைஸ்டு‘ தொழில் நுட்பத்தை புகுத்தி மாற்றியுள்ளனர். சிறுநீர், மலம் கழிக்க 18 கழிப்பறைகள் உள்ளன. கழிவுநீர் செல்லும் குழாயின் நுனிப்பகுதியில், நவீன வால்வு பொருத்தப்பட்டுள்ளது.இந்த வால்வு, கழிவுநீர் செல்லும் போது திறக்கும். கழிவு நீர் சென்றவுடன் மூடிக்கொள்ளும். கழிவுநீர் துர்நாற்றம் வெளியேறாது.
கழிப்பிடத்தின் மேற்பகுதியில் ‘ஓசோன்‘ வாயுவை 24 மணி நேரமும் உமிழும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஓசோன் இயற்கையான ஆக்சிஜன். இதை சுவாசிப்பதால் பாதிப்பு இல்லை.பிளீச்சிங் பவுடர் தூவினால், அரை மணி நேரத்திற்கு மட்டும் குளோரின் காஸ் இருக்கும்; இது பாதிப்பை ஏற்படுத்தும்.இக்கழிப்பிடத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்து, நவீனப்படுத் தப்பட்டுள்ளது. மாநகராட்சி 19 ஆயிரம் ரூபாயை செலவு செய்துள் ளது. நேற்று முதல் இந்த கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி கூறுகையில்,”கோவை மாநகராட்சியில் 250 பொதுக்கழிப்பிடங்கள் கட்டண முறையிலும், இலவசமாகவும் உள்ளது. முதற்கட்டமாக ஓசோன் தொழில் நுட்பத்தை இக்கழிப்பிடத்தில் பயன்படுத்தியுள்ளோம். ”இக்கழிப்பிடத்திலிருந்து துர்நாற்றம் வீச வாய்ப்புகள் இல்லை. சோதனைக்கு பின், அனைத்து கழிப்பிடங்களிலும் இதே தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்,” என்றார்.