தினகரன் 01.06.2010
மணவாளக்குறிச்சி பேரூராட்சி புதிய தலைவர் தேர்வு
குளச்சல், ஜூன் 1:மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இப்பேரூராட்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இங்கு சுயேட்சையாக போட்டியிட்ட ஜோஸ்பின் ரீட்டா தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அவர் திமுகவிற்கு மாறினார். இங்கு துணைத்தலைவராக திமுகவை சேர்ந்த ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஜோஸ்பின் ரீட்டாவிற்கும் துணைத்தலைவர் ராஜனுக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஜோஸ்பின் ரீட்டா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய நேற்று காலை மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை, தேர்தல் அலுவலர் கண்மணி நடத்தினார். இதில் சுயேட்சையாக மனுதாக்கல் செய்திருந்த கவுன்சிலர் ரோஸ்மேரிக்கு ஆதரவாக 11 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். 4 கவுன்சிலர்கள் வரவில்லை.
புதிய தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ரோஸ்மேரிக்கு தேர்தல் அதிகாரி கண்மணி சான்றிதழை வழங்கினார். பேரூராட்சி செயல்அலுவலர் ராஜேஸ்வரி உடனிருந்தார்.