தினமலர் 21.07.2010
மதுரையில் செயல்பட்ட கலப்பட டீத்தூள் ஆலை கண்டுபிடிப்பு
மதுரை, ஜூலை 21: மதுரை பொன்மேனி பகுதியில் போலி டீத்தூள் ஆலை செயல்படுவதாக கலெக்டர் காமராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் முருகையா தலைமையிலான அதிகாரிகள், பொன்மேனி ஈ.எம்.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர்.
அங்கு மூட்டை, மூட்டையாக போலி டீத்தூள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர் பிரேம் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இந்த ஆலையை மதுரையை சேர்ந்த ராமானுஜம் மற்றும் ஊட்டியை சேர்ந்த குமார் ஆகியோர் சேர்ந்து நடத்துவது தெரிந்தது.
இவர்கள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இருந்து மிகவும் மட்டமான டீத்தூளை வாங்கி வந்து, கெமிக்கலை கலந்து, மதுரை நகர் முழுவதும் உள்ள டீக்கடைகளில் ‘அஸாம் டீத்தூள்’ என்ற பெயரில் விற்பனை செய்தது தெரிந்தது.
டீத்தூள்களை ஆய்வு செய்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சுப்பிரமணியம் கூறுகையில், “மட்டரகமான டீத்தூளில், மரத்தூள் மற்றும் தடை செய்யப்பட்ட சன்ரெட் யெல்லோ என்ற கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது. இந்த கெமிக்கலை உணவுப் பொருளில் கலக்க அரசு தடை விதித்துள்ளது. இதைக் கொண்டு டீ தயாரித்தால், அதிகமான கலர் கிடைக்கும். இந்த டீயை குடித்தால் புற்றுநோய், சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும்” என்றார்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 8 மூட்டை டீத்தூள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த டீத்தூள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவு கிடைத்தபின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை அருகே செயல்பட்டு வந்த போலி டீத்தூள் ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூள் பாக்கெட்டுகள்.