தினமலர் 27.07.2010
மதுரையில் மயானங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
மதுரை: மதுரையில் நகருக்குள் உள்ள மயானங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை போக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதனால் முன்பு நகரைவிட்டு வெளியே இருந்த மயானங்கள் தற்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிட்டன. மதுரை நகரில் இறந்தோரை அடக்கம் செய்யும் பிரதான மயானம் தத்தனேரியில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் கீரைத்துறை மூலக்கரையில் மாநகராட்சியால் நவீன தகன மையம் அமைக்கப்பட்டது. இவை தவிர ஆங்காங்கே சிறு, சிறு மயானங்கள் உள்ளன. அவற்றில் மகாத்மா காந்திநகர்,மாடக்குளம், மாட்டுத்தாவணியில் உள்ளவை முக்கியமானவை. இவை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன.பஸ் ஸ்டாண்ட் எதிரே: மகாத்மா காந்தி நகரில் பஸ் ஸ்டாண்ட் எதிரே, சுற்றிலும் வீடுகள் சூழ்ந்திருக்க மையத்தில் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. காம்பவுண்ட் சுவருக்குள் தகன மேடைகள் உள்ளன. இவற்றில் பிணங்களை எரித்தால், அதிலிருந்து எழும் புகை, காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. எரியூட்டப்படும் சாம்பல் துகள்களும், துர்நாற்றமும் காற்றில் பறந்து மக்கள் நடமாடும் பகுதியில் மாசு ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். குழந்தைகளுக்கு உடலளவிலும், மனஅளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதே நிலைதான் மாட்டுத்தாவணி அருகில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் (ஆர்.டி.ஓ.,), அரசு போக்குவரத்துக் கழக டிப்போவும் உள்ளது. பல குடியிருப்புகளும் இங்கு உள்ளன. இந்த அலுவலகங்களின் மேற்கு பகுதியில் புதூர் கற்பகநகரின் அருகில் மயானம் உள்ளது. இங்கும் பிணங்களை எரியூட்டும் பணி நடக்கிறது. இங்கிருந்து எழும் புகை ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்குள் புகுவதுடன், துர்நாற்றமும் வருகிறது. பைல்களின் மேல் சாம்பல் படிகிறது.மாடக்குளம் மயானத்தை ஒட்டி ஜெய்நகர் உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கும் இதே பிரச்னை தான். பாதுகாப்பு ஏற்பாடு: இதுபோன்ற பகுதிகளில் இருந்து மயானத்தை மாற்றுவது எளிதானதல்ல என்பதால் வேறு நடைமுறையை கையாண்டு பாதிப்பை தவிர்க்கலாம். மயானங்களின் காம்பவுண்ட் சுவரை உயரமாக எழுப்பலாம். தகன மேடையை பாதுகாப்புடன் அமைத்து, புகையை வெளியேற்றும் உயரமான “சிம்னி‘களை (புகைக் கூண்டு) ஏற்படுத்தலாம். இதனால் நகருக்குள் தகன மேடை இருந்தாலும் யாருக்கும் பாதிப்பு வராது. சுற்றுச் சூழலும் கெடாது. சென்னை அண்ணாநகர் பகுதியில் இதுபோன்ற அமைப்புடன் உள்ளதால் மயானம் அருகிலேயே, பொதுமக்கள் பாதுகாப்புடன் வசிக்கின்றனர். மதுரையிலும் இதேபோல நகருக்குள் இருக்கும் மயானங்களில் பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிக்க மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.