தினமலர் 28.01.2010
மதுரை ஓட்டல்கள், டீக்கடைகளில் சுகாதாரம் எங்கே? சென்னையைப் போல நடவடிக்கை வருமா?
மதுரை : சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஓட்டல்கள் மீது, சென்னை மாநகராட்சியைப் போல மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லாத மதுரையில் பெரும்பாலானோருக்கு தெரிந்த தொழில் வடை கடை அல்லது இட்லி கடை நடத்துவது தான். சந்து, சாக்கடை, குப்பைமேடு என எதையும் பார்க்காமல், எங்கு திறந்தவெளி இருந்தாலும் அங்கு ஒரு டேபிளை வைத்து, அடுப்பு மூட்டி, சட்டியை சூடாக்கி எதையாவது சமைத்து விடுவர். இந்த இடத்திற்கு வாடகை கிடையாது, லைசென்ஸ் கிடையாது, கட்டடம் கிடையாது என்பதால் இத்தொழிலை எளிதாக துவக்கி விடுகின்றனர்மாநகராட்சி சட்டப்படி, கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்கள், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். கலப்படம் செய்யப்பட்டிருக்கக் கூடாது. சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டும்.
கழிவு நீரை, முறைப்படி வெளியேற்ற வேண்டும். பொது சுகாதாரத்தை மாசுபடுத்தக் கூடாது.ஆனால் மதுரையில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்கள் இதை கடைப்பிடிப்பதில்லை. சுகாதாரமற்ற சூழ்நிலையில் தயாராகும் உணவு பொருட்கள் அமோகமாக விற்கப்படுகிறது. “இது தான் மதுரை ஸ்பெஷல்‘ என சிலாகித்தபடி பலர், ருசித்து சாப்பிடுகின்றனர். சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.லைசென்ஸ்: ஒரு ஓட்டல் அல்லது டீக்கடை துவக்க வேண்டுமானால், மாநகராட்சியில் “டி அண்ட் ஓ (டேஞ்சரஸ் அண்ட் அபன்சிவ்) லைசென்ஸ்” என அழைக்கப்படும் அபாயகரமானதும், ஆட்சேபகரமானதுமான தொழிலுக்கு உரிமம் பெறப்பட வேண்டும். தொழிலைப் பொறுத்து இதற்கான கட்டணம் மாறுபடும். ஆண்டுக்கு ஆண்டு இதை புதுப்பிக்க வேண்டும்.சுகாதாரமற்ற ஓட்டல்கள், டீக்கடைகளின் லைசென்சை, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ரத்து செய்யலாம். அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால், சுகாதார அலுவலர்களுக்கு, மதுரையில் குப்பை அள்ளுவதை கண்காணிக்கவே நேரம் சரியாக இருப்பதால், ஓட்டல்களில் சோதனை செய்வதில்லை. சில வார்டுகளில் ஓட்டல்களின் “கவனிப்பால்‘, சுகாதார கேடுகளை கண்டுகொள்வதில்லை. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஓட்டல்கள் மீது, நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது போன்ற நடவடிக்கை, மதுரை மாநகராட்சியில் எப்போதாவது பெயரளவில் மட்டுமே எடுக்கப்படுகிறது. இனியாவது, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சுகாதாரமற்ற ஓட்டல்களில் மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மதுரை மக்கள், ஆரோக்கியமாக வாழ முடியும்.
வார்டுக்கு “போட்டா போட்டி‘:மதுரை மாநகராட்சி வார்டுகளில், சுகாதார அலுவலர்களால் அதிகம் விரும்பப்படுவது, பெத்தானியாபுரம் (71வது வார்டு). ஓட்டல்கள், டீக்கடைகள், ஒர்க்ஷாப்புகள் என 900 கடைகள் இருக்கின்றன. இவற்றில் பாதி தான், “டி அண்ட் ஓ” லைசென்ஸ் பெற்றுள்ளன. மீதி கடைகளுக்கு, இப்படி ஒரு லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதே தெரியாது. சோதனைக்கு வரும் போதோ அல்லது லைசென்சை புதுப்பிக்க வேண்டிய காலத்திலோ சுகாதார அலுவலரை “கவனித்தால்‘ போதும். ஏராளமான கடைகள் இருப்பதால், இங்கு பணிபுரிபவர் காட்டில் “பண மழை‘ தான். இதற்காகவே இந்த வார்டில் பணிபுரிய, அலுவலர்களுக் குள் “போட்டா போட்டி‘யே நிலவுகிறது.