மதுரை குப்பையை பார்வையிட்ட பஞ்சாப் உள்ளாட்சித்துறை செயலர்
மதுரை: பஞ்சாப் மாநில உள்ளாட்சித்துறை செயலர் பாலமுருகன், நேற்று மதுரை மாநகராட்சி குப்பையை நேற்று பார்வையிட்டார். அவனியாபுரம் வெள்ளைக்கல்லில், ரூ.72.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அதே பகுதியில், ரூ.57 கோடி மதிப்பில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணி நடந்து வருகிறது. அவை, மத்திய அரசின் தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டவை.பஞ்சாப் மாநிலத்திலும், இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அது பற்றிய விபரங்களை அறியவும், செயல்முறையை பார்வையிடவும், அம்மாநில உள்ளாட்சித்துறை செயலர் பாலமுருகன், ஒரு நாள் பயணமாக நேற்று மதுரை வந்தார். வெள்ளக்கல் சென்ற அவர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட்டார். கமிஷனர் நந்தகோபால், நகர் பொறியாளர்(பொறுப்பு) மதுரம், திடக்கழிவு மேலாண்மை திட்டத் தலைவர் பங்கஜ் ஜெயின் உடன் சென்றனர்.