தினமலர் 02.02.2010
மதுரை பெருநகர் வளர்ச்சி குழும திட்டம் தயாராகிறது : மேலூர் வரை நீட்டிக்க யோசனை
மதுரை : சென்னையைப் போல், மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, “மதுரை பெருநகர் வளர்ச்சி குழுமம்‘ (மதுரை மெட்ரோபாலிடன் டெவலப் மென்ட் அதாரிட்டி – எம்.எம்.டி.ஏ.,) அமைக்கும் திட்டம் தயாராகிறது. மேலூர் வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கி, இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னையில் மட்டுமே “பெருநகர வளர்ச்சி குழுமம்‘ இயங்குகிறது. நகரமைப்பு, சாலை, குடிநீர், சாக்கடை, மழை நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை இக்குழுமம் தான் மேற்கொள்கிறது. மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் குழுமங்களை ஏற்படுத்தி, நகரங்கள் விரிவாக்கப்படும் என மாநில அரசு அறிவித்தது.
உள்ளூர் திட்ட குழுமம்: தற்போது மதுரை உள்ளூர் திட்டக் குழுமத்தின் (எல்.பி.ஏ.,) கீழ், மதுரை நகரம் (51.82 ச.கி.மீ.,), திருமங்கலம் (10.95 ச.கி.மீ.,), ஆனையூர் (9.53 ச.கி.மீ.,), அவனியாபுரம் (27.76 ச.கி.மீ.,), திருப்பரங்குன்றம் (10.79 ச.கி.மீ.,) ஆகிய நகராட்சிகளும், பரவை (8.99 ச.கி.மீ.,), விளாங்குடி (6 ச.கி.மீ.,), திருநகர் (1.40 ச.கி.மீ.,), ஹார்விபட்டி (0.29 ச.கி.மீ.,), சோழவந்தான் (16.21) ஆகிய பேரூராட்சிகளும் வருகின்றன. இவை நகரப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை.
இது தவிர, மதுரை தெற்கு தாலுகாவில் ஒரு பகுதி (190.73 ச.கி.மீ.,), வடக்கு தாலுகாவில் ஒரு பகுதி (202.04 ச.கி.மீ.,), திருமங்கலம் தாலுகாவில் ஒரு பகுதி (59.60 ச.கி.மீ.,), வாடிப்பட்டி தாலுகாவில் ஒரு பகுதி (64.59), உசிலம்பட்டி தாலுகாவில் ஒரு பகுதி (5.12 ச.கி.மீ.,), மானாமதுரை தாலுகாவில் ஒரு பகுதி (47.31 ச.கி.மீ.,), காரியாபட்டி தாலுகாவில் (7.84 ச.கி.மீ.,) ஆகியவையும் மதுரை எல்.பி.ஏ., எல்லையின் கீழ் கிராமப்பகுதிகளாக இப்போது உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 721 ச.கி.மீ., இப்பகுதிகள் தவிர, மேலூர் நகராட்சி, மேலூர் தாலுகாவில் ஒரு பகுதி, மதுரை தெற்கு மற்றும் நடக்கு தாலுகாக்கள் முழுவதும் ஆகியவற்றையும் இணைத்து “மதுரை பெருநகர வளர்ச்சி குழுமம்‘ அமைக்க, திட்டம் தயாரிக்கப்படுகிறது.
எந்தெந்த ஊராட்சிகளை சேர்ப்பது என இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. அதன் பிறகு தான், எம்.எம்.டி.ஏ.,யின் மொத்த பரப்பளவு தெரிய வரும். இத்திட்டம் நிறைவேறினால், மதுரை உட்பட இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகள் வளர்ச்சி அடையும். உலக வங்கி கடன் போன்றவையும் அதிகளவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.