தினமலர் 20.07.2010
மதுரை மாநகராட்சிக்கு எதிராக மனு செய்தவருக்கு ஐகோர்ட் அபராதம்
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு எதிராக மனு செய்த கோயில் டிரஸ்டி, ஐயாயிரம் ரூபாய் கமிஷனருக்கு அபராதம் செலுத்தும்படி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த இளவரசன் தாக்கல் செய்த ரிட் மனு:எழுகடல் தெருவில் சடையாண்டி சுவாமிகோயில் டிரஸ்டியாக உள்ளேன். அங்குள்ள ராயகோபுரத்தில் பத்து தூண்கள் உள்ளன. அதில் ஒரு தூணில் ஜடாமுனி உருவம் உள்ளது. அதை நாங்கள் வழிபடுவோம். அது தற்போது சடையாண்டியாக அழைக்கப்படுகிறது.
அந்த தூண், ரோட்டை விட நான்கு அடி கீழே உள்ளது. பக்தர்கள் இறங்கி வழிபட படிகட்டுகள் உள்ளன. தூணிலுள்ள உருவத்தை பாதுகாக்க சிறிய சுவர் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சுவர், மாநகராட்சி இடத்தில் உள்ளது. அந்த இடத்திற்குரிய விலையை பெற்று கொண்டு குத்தகை அல்லது ஒதுக்கி கொடுக்கும்படி மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கப் பட்டது. அதற்கு கமிஷனர் மறுத்து விட்டார். இடத்தை வழங்க உத்தரவிட வேண்டும், எனதெரிவிக்கப்பட்டது.மனு நீதிபதி எஸ்.மணிக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி சார்பில் வக்கீல் ரவிசங்கர், ஆஜரானார். ஏற்கனவே வழக்கு குறித்து சில தகவல்களை மறைத்து கோர்ட் நேரத்தை வீணடித்தது குறித்து மனுதாரர் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். பின், மனுதாரர், மாநகராட்சி கமிஷனருக்கு ஐயாயிரம் ரூபாய் நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிட்டார்.