தினமலர் 14.01.2015
தினமலர் 14.01.2015
மதுரை மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு
உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த மருத்துவமனைகள்,
திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில்
சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கொசு உற்பத்தியாகும்
வகையில் இருக்கும்
கட்டடங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஆணையாளர் சி.கதிரவன் உத்தரவின் பேரில், 4
மண்டலத்துக்கும் உள்பட்ட பகுதிகளில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், திருமண
மண்டபங்கள்,
திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தனியார் வணிக வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 12
தனியார் மருத்துவமனைகள், 8 திரையரங்குகள், 5 திருமண மண்டபங்கள், 3 தனியார்
பள்ளிகள், 2 தனியார் வணிக வளாக கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வகையில், மண்டலம் 1-ல் உதவி ஆணையாளர் ஆர். குணாளன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.30 ஆயிரமும், மண்டலம் 2-ல் உதவி ஆணையாளர்
பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.10,000-ம், மண்டலம் எண் 3-ல்
உதவி ஆணையாளர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற ஆய்வில் ரூ.5,000-ம்,
மண்டலம் எண் 4-ல் ரூ.5,000-ம் ஆக மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள
மாநகராட்சி மூலம் கட்டட உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின்
போது
சுகாதாரக்கேடு தெரியவந்தால், அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் போது, சுகாதார ஆய்வாளர்கள் வீரன், கோபால், ராஜ்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.