தினமணி 30.06.2010
மரங்களை அகற்றுவதில் கவனம் தேவை
திருச்சி, ஜூன் 29: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது; அதேநேரத்தில், நகரின் பசுமை குன்றாமல் பாதுகாக்க– மரங்களை அகற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என, மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அ. ஜோசப் ஜெரால்டு (தேமுதிக): காந்தி மார்க்கெட் பகுதியில் கார்களுக்கு கட்டணம் வசூலிப்பவர்கள மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
ஜெ. சீனிவாசன் (அதிமுக): இங்கு மட்டுமல்ல, மாநகரின் பல பகுதிகளில் இதேபோல, கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், நிபந்தனைகளில் இல்லாத வாகனங்களுக்கு வசூலிப்பதும் தொடர்கிறது.
த.தி. பால்சாமி (ஆணையர்): ஏல நிபந்தனைகளின்படி சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் முடியும். அடுத்த கூட்டத்தில் இதுதொடர்பாக விசாரித்து மாமன்றத்தில் அறிக்கை வைக்கப்படும்.
இரா. ஜவஹர் (காங்.): புதை சாக்கடைப் பணிகளின்போது அண்மையில் இருவர் இறந்தனர். குடிநீர் வடிகால் வாரியம் இந்தப் பணிகளைக் கவனித்தாலும்கூட, மக்கள் மத்தியில் மாநகராட்சியின் பெயர்தான் அடிபடுகிறது. நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
ஜெ. சீனிவாசன்: பல இடங்களில் புதை சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீருடன் கலந்து விடுகிறது. குடிநீர் திறக்க வேண்டிய இடங்களிலும் பணியாளர்கள் இருப்பதில்லை. வாரியப் பணியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் சொன்னால் செய்வதில்லை.
ரெ. ஸ்ரீராமன் (இந்திய கம்யூ.): புதைச் சாக்கடைக்கு மாநகராட்சிதான் வைப்புத் தொகை வசூலிக்கிறது. எனவே, இதில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும், அது யாரால் ஏற்பட்டாலும், மாநகராட்சியின் பெயர்தான் கெடும். பணியில் இறங்குவோர் முகமூடி அணிய வேண்டும் என ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது?
த.தி. பால்சாமி: பணியாளர்கள் முகமூடி அணிய மறுக்கின்றனர். குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களில் 7 பேரை, சரியாகப் பணியாற்றுவதில்லை என்று கூறி வேண்டாம் எனத் திருப்பி அனுப்பியிருக்கிறோம். இனிமேல் புதை சாக்கடைப் பணிகளில் ஆள்களை இறங்கவிடக் கூடாது. அனைத்து இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன.
ரெ. ஸ்ரீராமன்: கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்க தீர்மானம் நிறைவேறியது. ஆனால், அவை வாங்கப்பட்டனவா? மழைக்காலம் வந்துவிட்டது. பல இடங்களில் கொசுத் தொல்லை அதிகரித்திருக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): இப்போது கொசு மருந்து அடிக்கிறீர்களா? எனது வார்டில் கொசு மருந்து அடித்து 6 மாதங்களாகிவிட்டன. காந்தி மார்க்கெட் பகுதியில் குப்பைகள் அதிகம் சேர்கின்றன.
கே.சி. சேரன் (நகர் நல அலுவலர்): கொசு மருந்தடிக்கும் பட்டியல் அனைத்து உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும்.
ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்.): மேலரண் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது சாலை ஓரத்திலுள்ள பெரிய மரங்களையும் எடுத்துவிடுகின்றனர். சாலையின் இரு மருங்கிலும் தார்ச் சாலை போடுவது சரியானதுதான் என்றாலும், பிற்காலத்தில் கார் நிறுத்தம் வைக்கப் போகும் இடங்களில் உள்ள மரங்களை ஏன் அகற்ற வேண்டும். நகரின் பசுமை கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது. கார் நிறுத்தவுள்ள இடங்களில் மரம் இருக்கக் கூடாதா?
ரெ. ஸ்ரீராமன்: மேலரண் சாலையும், கீழரண் சாலையும் 100 அடி சாலைகள். இப்போது 100 அடி இருக்கிறதா? அதை முதலில் பாருங்கள். பழைமையான மரங்களை எடுப்பதற்கு முன், பழைமையான ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி எடுக்க வேண்டும்.
அ. ஜோசப் ஜெரால்டு: காந்திமார்க்கெட் எம்ஜிஆர் சிலையிலிருந்து மெயின்கார்டு கேட் வரையிலும் எந்த இடத்திலும் “பார்க்கிங்‘ வசதி இல்லை. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
குடிநீர் பிரச்னை:
கயல்விழி சேகர் (அதிமுக): எனது வார்டில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை. மக்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
ஆர். வனிதா (அதிமுக): எனது வார்டிலும் குறிப்பிட்ட சில தெருக்களுக்கு பல மாதங்களாகத் தண்ணீர் வருவதில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு லாரிகளில் தண்ணீர் வழங்கப் போகிறோம்?
குடிநீர் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்த செயற்பொறியாளர்கள், தகவல் கொடுத்தால் அவ்வப்போது பிரச்னைகளை தீர்த்துக் கொடுக்கிறோம் என பதிலளித்தனர்.