தினமலர் 15.06.2010
மரங்களை வீழ்த்தியது மாநகராட்சி
திருப்பூர் : மகளிர் தொழிற்பயிற்சிக்கூடம் அமைக்க, பள்ளி வளாகத்தில் இருந்த 30 மரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெட்டி, வீழ்த்தியுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முத்துப் புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் இருந்த 30க்கும் அதிகமான மரங்கள் நேற்று முன்தினம் வெட்டப்பட்டது. மாநகராட்சி எல்லைப்பகுதிக்குள் மரங்களே இல்லாத நிலையில், பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களையும், மாநகராட்சி நிர்வாகம் வெட்டியுள்ளது.அதிகாரிகளிடம் கேட்ட போது, “சுவர்ண ஜெயந்தி திட்டத்தில், மகளிருக்கான இலவச தொழிற்பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலேயே தொழிற்பயிற்சி மையம் அமைய வேண்டும் என்பதற்காக, பள்ளி வளா கத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்காக சில மரங்களை வெட்டியுள்ளோம். வேறு வழியில்லை,’ என்றனர்.
அதேசமயம், பள்ளி நிர்வாகத்துக்கு எதற்காக மரங்களை வெட்டினர் என்பது தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், “மாநகராட்சி ஊழியர்கள்தான் வெட்டினர். எங்களுக்கு வேறு விபரங்கள் தெரியாது. அருகில் மின்கம்பிகள் செல்வதால் வெட்டியிருக்கலாம்,’ என்றனர்.கட்டமைப்பு வசதிகளுக்காக மரங்களை வெட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம். தவிர்க்க இயலாத தருணங்களில் ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப்பதில் இரு மரக்கன்றுகளை நட, மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.