தினமணி 21.04.2010
மரம் வளர்ப்போம் வாங்க! இளைஞர்களுக்கு பேரூராட்சி அழைப்பு
பெ.நா.பாளையம், ஏப் 17: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ள மரங்களை வளர்க்கும் பணியில் பேரூராட்சியோடு இணைந்து இளைஞர்கள் ஊக்கத்துடன் செயலாற்ற வேண்டும் என்று, பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மாலயா இரா.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இங்குள்ள அம்பேத்கர் நகரில் உள்ள இளைஞர்கள் இணைந்து புதிதாக ஜெய்ஹிந்த் நற்பணி அமைப்பைத் துவக்கி உள்ளனர். இதன் துவக்க விழா மற்றும் பெயர் பலகைத் திறப்பு விழா (படம்) நரசிம்மநாயக்கனபாளையத்தில் புதன்கிழமை நடந்தது.
8வது வார்டு கவுன்சிலர் மேகன்ராஜ் முன்னிலை வகித்தார். அமைப்பைத் துவக்கி வைத்து பேசிய இரா.சீனிவாசன், “பேரூராட்சியின் சார்பில் இப்பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. இதனைப் பாதுகாக்க பேரூராட்சி கம்பி வலைகளை ஏற்பாடு செய்தது. ஆனாலும் அதில் பாதிக்கு மேல் அழியும் நிலையில் உள்ளன. எஞ்சியவற்றை பாதுகாக்கும் பணியில் இளைஞர், மகளிர் அமைப்புகள் பேரூராட்சி நிர்வாகத்தோடு இணைந்து ஈடுபட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
விழாவில் அமைப்பின் தலைவர் பி.வடிவேல், செயலாளர் பாலன் சம்பத்குமார், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.