தினமலர் 18.02.2010
மருத்துவ மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற ஆய்வு! மாநகராட்சி நகர்நல துறை தீவிர முயற்சி
கோவை : கோவை மாநகராட்சியிலுள்ள 20 மருத்துவ மையங்கள் மற்றும் மகப்பேறு மையங்களுக்கு “ஐ.எஸ்.ஓ., தரச்சான்று‘ பெறுவதற்கான ஆரம்ப நிலை ஆய்வு நடக்கிறது.
மாநகராட்சியின் 72 வார்டுகளில் 20 மருத்துவ மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், ஆறு மையங்களில் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. மீதமுள்ள 14 மருத்துவ மையங்களில் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மருத்துவ மையமும், மருத்துவ அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.
மருத்துவ அலுவலர் தவிர, நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் எட்டு பேர், சுகாதார பார்வையாளர் ஒருவர், ஆயா மற்றும் துப்புரவு பணியாளர் என மொத்தம் 12 பேர் பணியில் உள்ளனர். தினமும் காலை 8.30 முதல் 12.30 மணி வரை, மாலை 3.00 முதல் 5.00 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாரம் தோறும் புதனன்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
இருபது மையங்களிலும் புற்றுநோய் ஒழிப்பு பிரிவு செயல்படுகிறது. இங்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. குடும்ப கட்டுப்பாடு மருத்துவ முறைகள் மற்றும் தடுப்பு சாதனம் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தும் வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை தோறும், காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தவிர, பொதுமருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தரமான மருத்துவசேவை அளித்து வரும் மாநகராட்சி மருத்துவ மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ.,தரச்சான்று பெறுவதற்கான ஆய்வில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, ஐ.எஸ்.ஓ., சான்று பெறும் வழிமுறைகளுக்கான ஆலோசகர் சிவக்குமார் கூறியதாவது: கோவை மாநகராட்சியிலுள்ள 20 மருத்துவ மையங்களையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவ மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அலுவலர் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை, நோயாளிகளை பராமரிக்கும் முறை, மருந்து பொருட்கள் வழங்கும் விதம் மற்றும் ஆவண பராமரிப்பு தொடர்பாக ஆய்வு நடக்கிறது.
மாநகராட்சி மருத்துவ மையங்கள், தனியார் மருத்துவமனைகளுடன் போட்டி போடும் வகையில் சிகிச்சையின் தரம் உயர்ந்துள்ளது. அதேவேளையில் சில குறைபாடுகள் ஆய்வில் தெரியவந்து சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. தற்போது, ஐ.எஸ்.ஓ., சான்று பெறுவதற்கான முதல்நிலை ஆய்வு மேற் கொண்டுள்ளோம். மருத்துவசேவை மற்றும் பராமரிப்பு பணிகளில் திருப்தி ஏற்பட்ட பின், ஐ.எஸ்.ஓ., சான்று பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அப்போது, முழுமையான தரத்துடன் மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும். இவ்வாறு, சிவக்குமார் தெரிவித்தார்.
மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் சுமதி கூறியதாவது: கடும் பணிகளுக்கிடையே மேற்கொண்ட முயற்சியினால் 20 மருத்துவ மையங்களும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்ந்துள்ளது. மருத்துவக் கருவிகள், ஸ்கேனர், டாப்ளர் இயந்திரங்கள் என்று, அறுவைச்சிகிச்சை மையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன. தவிர, மருத்துவ மையங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக மக்களுக்கு, மாநகராட்சி மருத்துவ தரத்தை தெரியப்படுத்தும் விதமாக ஐ.எஸ்.ஓ., சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இவ்வாறு, சுமதி தெரிவித்தார்.