தினமணி 10.02.2010
மலத்தொட்டி கழிவு நீர் வெளியேற ம வடிவ குழாய் பொருத்த யோசனை
புதுச்சேரி, பிப். 9: மலத்தொட்டி கழிவு நீரை வெளியேற்ற ‘ம‘ வடிவ குழாய் பொருத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை கொசு ஒழிப்புத்துறை உதவி இயக்குநர் என்.நீலாமணி தெரிவித்தார். புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்களுடனான கொசு ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உதவி இயக்குநர் என் நீலாமணி பேசியது:
புதுச்சேரி பகுதியில் கொசுக்களை ஒழிக்க இம்மாதம் 10-ம் தேதி முதல் 16 தேதி வரை தீவிர கொசு ஒழிப்பு வாரம் நடத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கொசு ஒழிப்பு வாரத்தில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை சேர்ந்து கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும்.
அதிகப்படியான கொசுக்கள் மலத்தொட்டியிலிருந்துதான் உருவாகின்றன. அதை தடுக்கும் விதமாக “ம‘ வடிவ குழாயை பொருத்தி கழிவு நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.150 வரை செலவாகும். ஆனால் இதை ஆர்டர் கொடுத்து அதிக அளவில் செய்யும்போது, இதன் விலை ரூ.30-க்கு வந்துவிடும். இந்த “ம‘ வடிவ குழாய்களை பயன்படுத்துவதால் குழாயில் எப்பொழுதும் நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் தொட்டிக்குள் சென்று இனப்பெருக்கம் செய்வது தடுக்கப்படும். இதனால் பெருமளவு கொசுக்களை ஒழிக்க முடியும்.
மேலும் மேல்நிலைத் தொட்டிகளையும், கீழ்நிலை தொட்டிகளையும் மூடி வைக்க வேண்டும். கிணறுகளை வலை போட்டு மூடி வைக்க வேண்டும். பயன்படுத்திய நீரை தேங்காமல் அப்புறப்படுத்துவதால் கொசுக்கள் உருவாகாமல் தடுத்த முடியும். பயனற்ற பொருள்களை மட்காத குப்பை மற்றும் மட்கும் குப்பை என பிரித்து அப்புறப்படுத்துவதாலும், ஆட்டுரலை மழை நீர் தேங்காமல் கவிழ்த்து வைப்பதாலும் கொசுக்களை தடுக்க முடியும். குடிக்க பயன்படுத்தும் நீரில் உருவாகும் கொசுக்களை தடுக்க கம்பூசியா என்ற மீன் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட இருக்கிறது. தற்போது மேற்கொள்ளப்படும் கொசு ஒழிக்கும் பணிக்கு நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் முழு ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.
நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதேவி, நகராட்சி ஆணையர் அசோகன், உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியம் நகர் நல அலுவலர் இளங்கோவன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.