தினமலர் 19.08.2010
மலேரியா நோய் ஒழிப்பு ஊழியர்கள் பற்றாக்குறை
கரூர்: கரூர் மாவட்ட நகராட்சிகளில் பற்றாக்குறை ஊழியர்களால், மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கை மெத்தனமாக உள்ளது.பருவநிலை மாறும்போது கொசு ஒழிப்பு நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கிறது. தண்ணீரில் மருந்து தெளிப்பது, புகை அடிப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அசுத்த நீரில் அனாபிளக்ஸ், க்யூலக்ஸ் கொசு உற்பத்தியாகிறது. இவை மலேரியா, யானைக்கால் நோய் உருவாக்குவதால், கட்டுப்படுத்த “பேக்டிசைடு‘ மருந்து சாக்கடையில் தெளிக்கப்படுகிறது.வீட்டில் தொட்டி மற்றும் பாத்திரங்களில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் “எடஃப்‘ கொசு மூலம் சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சல் உருவாகிறது. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மையுள்ளவை. இதை கட்டுப்படுத்த “அபேட்‘ மருந்து தெளிக்கப்படுகிறது. புகை இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில், கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் குளித்தலை என நான்கு நகராட்சிகள் உள்ளன. கரூர் நகராட்சியை தவிர, மலேரியா ஒழிப்பு பணிக்கு பற்றாக்குறை பணியாளர்களுடன் மற்ற நகராட்சிகள் தவிக்கிறது. பல மாவட்டங்களில் விஷக்காய்ச்சல் வந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாகவில்லை.கரூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கூறியதாவது:கரூர் நகராட்சியில் 15 மலேரியா திட்ட ஊழியர்கள், ஒரு கள உதவியாளர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு புகை இயந்திரங்கள் உள்ளன. ஆடி மாத காற்று காரணமாக புகை அடிக்கப்படாமல் இருந்து, நேற்று முதல் பயன்படுத்தப்படுகிறது.பொதுமக்களும் செப்டிக் டேங்க் குழாய் வாய் பகுதியை கொசுவலை துணியால் கட்டி வைப்பது, தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பது என ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து கொசு ஒழிப்பு மருந்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.குளித்தலை நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:குளித்தலை நகராட்சியில் ஏழு வாய்க்காலும் கழிவு நீர் சாக்கடையாக உள்ளதால், கொசு ஒழிப்பு நடவடிக்கை பெரிய சவாலாக உள்ளது. வாய்க்கால் தூர்வாரப்படாதது, ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்னைகளால் சுகாதார நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. மலேரியா பணியாளர்கள் 4 பேர் மட்டுமே உள்ளதால், ஊழியர் பற்றாக்குறையும் முக்கிய பிரச்னையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இனாம் கரூர் நகராட்சியிலும் இரண்டு மலேரியா திட்ட ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். “10 தற்காலிக ஊழியர் நியமனத்துக்கு மாவட்ட பொதுசுகாதாரத்துறையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக,’ நகராட்சி அலுவலர்கள் கூ றினர். தாந்தோணி நகராட்சியிலும் பற்றாக்குறை ஊழியர் பிரச் னை காரணமாக சுகாதார நடவடிக்கை மெத்தனமாக நடக்கிறது.