தினமணி 07.08.2013
மலைபோல் தேங்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் இருந்து
சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த குப்பைகள் விழுப்புரம் நகர
எல்லை அருகே மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
  பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகள் பிளாஸ்டிக் பைகளில்
போட்டு அதை அப்படியே குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனர். மேலும்
பூக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் என பல்வேறு வணிக நிறுவனங்களில்
40 மைக்ரானுக்கு குறைவான மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்
பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அனைத்தும்
 குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகின்றன.
 இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் விழுப்புரம் நகராட்சி மூலம்
தினம்தோறும் டன் கணக்கில் சேகரிக்கப்படுகின்றன. இவை விழுப்புரம்-திண்டிவனம்
 சாலையில் விழுப்புரம் நகர எல்லை அருகே கொட்டிவைக்கப்பட்டுள்ளன. சில
நேரங்களில் இந்த குப்பைகள் அங்கேயே எரிக்கப்படுகின்றன. இந்த குப்பைக்
கிடங்கு அருகே குடியிருப்புகள் இருப்பதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு
 ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பரவும் விஷவாயு: மேலும் குப்பைகளுடன் சேர்ந்து எரியும் பிளாஸ்டிக்
கழிவுகள் டயாக்ஸின் என்ற விஷவாயுவை வெளியிடுகின்றன. இதனால் கண் எரிச்சல்,
தோல் அலர்ஜி, ஆண், பெண் மலட்டுத் தன்மை, கருச்சிதைவு போன்ற நோய்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்
எச்சரிக்கின்றனர்.
 எனவே, இங்கு கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத
குப்பைகளாக பிரித்து மக்கும் குப்பைகளை விவசாய நிலங்களில் உரமாக
பயன்படுத்துவதற்கு டெண்டர் விட வேண்டும். மக்காத குப்பைகள் அதிகம் சேராத
வகையில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்க
வேண்டும். மேலும் தேநீர் கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதையும்
தடுக்க வேண்டும். இது குறித்து நகராட்சி துரித நடவடிக்கை எடுத்தால்தான்
விழுப்புரத்தின் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள்
எச்சரிக்கின்றனர்.
விழிப்புணர்வு கண்காட்சி: இது குறித்து விழுப்புரம் நகர கண்காணிப்புக்
குழு தலைவர் கா.தமிழ்வேங்கை கூறுகையில், குப்பைகள் கொட்டப்படுவதை
முறைப்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நகராட்சி
நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தரம் பிரித்து கொட்டுதல் உள்ளிட்டவை
குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பை
கண்காட்சி ஒன்றை விரைவில் நடத்த உள்ளோம். 
அதே வேளையில், விழுப்புரம் நகரின் சுகாதாரத்தை பாதுகாக்க திடக்கழிவு
மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்தி, மென் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை
விதிக்க வேண்டும் என்றார்.
