தினமலர் 26.04.2010
மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை : பேரூராட்சி, ஊராட்சியிடம் கருத்து கேட்பு
உடுமலை : ‘மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை அளிக்க வேண்டும்‘ என, சட்டசபையில் எம்.எல்.ஏ., கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சியிடம் மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.உடுமலை பகுதியில், ஆண்டியகவுண்டனூர், ராவணாபுரம், மானுப்பட்டி ஊராட்சிகள் மற்றும் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 18 செட்டில்மெண்ட் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு அளிக்கும் உரிமை இல்லை. இதுதொடர்பாக, உடுமலை எம்.எல்.ஏ., சட்டமன்றத்தில், ‘சட்டமன்றம் மற்றும் லோக்சபா தேர்தல் போல், உள்ளாட்சி தேர்தலிலும் மலைவாழ் மக்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும்,’ என கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன் மொழிந்தார்.இதையடுத்து, மலைவாழ் மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சியிடம் மாவட்ட நிர்வாகம் கருத்து கேட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில்,’உடுமலை பகுதியில் உள்ள 18 செட்டில்மெண்ட் பகுதி மக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட வேண் டும் என்றும், தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதிகள் 1995ன் படி, வாக்காளர் பட்டியல் அப்பகுதிக்கு தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான நடப்பு வாக் காளர் பட்டியலுடன் ஒத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 2006ம் ஆண்டு உடுமலை சட்டமன்ற வாக்காளர் பட்டியலுடன் மானுப்பட்டி, ஆண்டிய கவுண்டனூர், ராவணாபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகள், தளி பேரூராட்சி வாக்காளர் பட்டியல் ஒப்பீடு செய்து விடுபட்ட வாக்காளர் விவரங்களை கண்டறிய வேண்டும். வாக்காளர் பெயர் பட்டியலை மேற்குறிப்பிட்ட குடியிருப்பு வாரியாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடிதம் பெற்ற 15 நாட்களுக்குள் தொடர்புடையவர்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்‘ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளி பேரூராட்சி கவுன்சிலர்கள், ‘தளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஈசல்திட்டு, சேலையூத்து, தாளமேட்டுக்குடி, பூச்சிகொட்டம்பாறை, குறுமலை, திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் பகுதிகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை அளிப்பது குறித்து விவாதித்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளலாம்,’ என்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துக்களை தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.