தினமணி 12.03.2010
மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை
மானாமதுரை, மார்ச் 11: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தி இங்கு விற்கப்படும் பருப்பு வகைகளின் தரத்தை ஆய்வு செய்தனர்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபதி தலைமையில் மானாமதுரை வட்டார உணவு ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் துறை அலுவலர்கள் மானாமதுரையிலுள்ள பல்வேறு மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, இக் கடைகளில் விற்கப்படும் பருப்பு வகைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். பல கடைகளில் இவர்கள் பருப்பு வகைகளை சோதனைக்கு மாதிரி எடுத்துச் சென்றனர்.
இச் சோதனை குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் இச் சோதனை 9 இடங்களில் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரம், பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகம் விளையும் கேசரி பருப்பு வகைகளை இந்த மாநிலங்களில் உள்ள வசதியில்லாத மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் கை, கால்கள் செயல் இழந்துவிடும். இந்த கேசரி பருப்பை தமிழகத்தில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பருப்பை தமிழகத்தில் மளிகைக் கடைகளில் விற்கப்படும் பருப்பு வகைகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனையின்போது ஆய்வு செய்தோம். அப்படி எந்த கடைகளிலும் விற்பனை செய்யப்படவில்லை. கடைகளில் நடத்திய சோதனையின்போது மாதிரிக்காக எடுத்துச் செல்லப்படும் பருப்பு வகைகளை பரிசோதனைக்காக கொண்டு செல்வோம். பரிசோதனையில் பருப்பு வகைகள் தரம் குறைந்திருந்தால் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இச் சோதனையின்போது மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் சஞ்சீவி உடன் இருந்தார்.