தினமணி 07.09.2010
மழைக்காலத்தை எதிர்கொள்ள விரைந்து நடவடிக்கை: அனைத்து துறையினருக்கும் மேயர் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசுகிறார்
சென்னை, செப். 6: எதிர்வரும் மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் விரைவான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம், மின்சாரத்துறை, ரயில்வே துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:
மழைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்துத் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்க வேண்டும். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அக்டோபர் 20-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
சாலை சீரமைப்பு பணிகளும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். மழைக்காலங்களில் சாலை சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும். இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கும் நிலை உண்டாகும்.
இந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, செப்டம்பர் 20-ம் தேதிக்கு மேல் சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கு எந்த துறையினரும் அனுமதி வழங்கக் கூடாது. மேலும், சென்னை முழுவதும் சாலைகளில் தேங்கும் கழிவு நீரை விரைவில் அகற்ற கழிவு நீரகற்று வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளைத் தடுக்க தீயணைப்புத் துறையினரும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். அதே போல், மீன்வளத்துறையும் போதுமான படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்கால தொற்று நோய்களை தடுப்பதற்கு சுகாதாரத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, இணை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, துணை ஆணையர் (சுகாதாரம்) பா. ஜோதி நிர்மலா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.