தினமலர் 28.09.2010
மழைநீர் வடிகால் அமைப்புமாநகராட்சி கருத்து
மதுரை: “”மதுரையில் மழைநீர் வடிகால் அமைப்பு, அறிவியல்பூர்வமாக நிறைவேற்றப்படுகிறது‘” என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மதுரை தெருக்களில் தற்போது, மத்திய அரசின் நேரு நகர்ப்புற புனரமைப்பு நிதியின் கீழ், மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இது, அறிவியல்பூர்வமாக அமைக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இது பற்றி மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இவ்வடிகால் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர், அருகே உள்ள பெரிய வாய்க்கால்களில் சேரும். இங்கு சேகரிக்கப்படும் மழைநீர், முடிவில் வைகை ஆற்றில் விடப்படும் வகையில், முறையாக நிறைவேற்றப்படுகிறது.
பெரிய வாய்க்கால்களில் 30 மீட்டர் இடைவெளியில் மழைநீர் சேகரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. எனவே சாலையோர மழைநீர் வடிகாலில் சேரும் மழைநீர், பெரிய வாய்க்காலுக்கு செல்லும்போது, அதில் செய்யப்பட்டுள்ள அமைப்பு மூலம், மழைநீர் சேகரிக்கப்படும். சாலையோர மழைநீர் வடிகாலில் கான்கிரீட் தளம் அமைக்காமல் விட்டால், அதில் செடிகள் வளர்ந்து, மழைநீர் வடிய வழியில்லாமல் போய்விடும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, நகரப்பகுதியில் மழைநீர் தேங்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பது தான். இதனால் தொற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். தார்ச்சாலைகளும் சேதம் அடைவது குறையும். சில இடங்களில் சாலையின் மட்டம் ஒரே சீராக இல்லாத காரணத்தால், மழைநீர் வடிய இயலவில்லை. அதுபோன்ற இடங்கள், மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, சரி செய்யப்படுகிறது. பணிகள் முடிந்து 15 நாட்களுக்குள், சாலையோர மண் அள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.