தினமணி 10.11.2009
மழை தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி
மதுரை, நவ.9: பருவமழை தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:
மதுரையில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வெளியேற சுமார் 868 கி.மீ. நீளத்துக்கு வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. கிருதுமால், சிந்தாமணி, அவனியாபுரம், சொட்டதட்டி, பீ.பீ.குளம், பனையூர் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால், வைகையாற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கல்பாலத்தின் கீழே உள்ள துவாரங்களில் உள்ள அடைப்புகள் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் குழாய்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்தல், அபாயகரமான மரங்களை வெட்டுதல், சீரற்ற கட்டடங்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், காலரா பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுதல், நடமாடும் மருத்துவக் குழு அமைத்தல், வானிலை எச்சரிக்கை செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கவைப்பதற்கு 20 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவு வழங்குதல் போன்ற பணிகளில் மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மண்டல அலுவலகங்களில் 24 மணி நேரமும் பணியாற்றுவதற்கு வசதியாக சுழற்சி முறைப் பணி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சிப் பருக வலியுறுத்துதல், கழிவுநீர் தேங்காத வண்ணம் அகற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் சுகாதாரத் துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ஆணையர்.கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.