தினமணி 07.09.2010
மழை நீரை சேகரிக்கத் தயாராவோம் – சென்னை குடிநீர் வாரியம்
சென்னை, செப். 6: மழை நீரை சேகரிக்கத் தயாராவோம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பராமரித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் தியாகராயநகர், வடபழனி, சாலிகிராமம் பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட ஆகாஷ் கங்கா அறக்கட்டளையின் இயக்குநர் சேகர் ராகவன் பேசியது: மழைநீர் சேகரிப்புக்கு கசிவுநீர் குழிகளைவிட, கசிவுநீர் கிணறுகளே உகந்தவை. இதனால் அதிக அளவில் மழைநீரை நிலத்தடி நீராக சேமிக்க வாய்ப்பிருக்கிறது. குழிகளில் அடைப்பு ஏற்பட்டு உபயோகிக்க முடியாமலும் போகும்.
கசிவு நீர் கிணறுகளை மழைக்காலத்தில் ஓரிரு முறையும், மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு ஒரு முறையும் தூர் வார்வது நல்லது. மழைநீரைச் சேமிக்கும் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம் என்றார் சேகர் ராகவன்.
தியாகராயநகர் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த கோவிந்தராஜ் பேசியது: மழை நீரைச் சேகரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் சாலைகள், தெருக்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் சிறிய மழை பெய்தாலே மழை நீர் சாலைகளில் தேங்குவதும், கழிவுநீரில் கலந்து கடலில் கலப்பதுமாக வீணாகி வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால் அமைப்பு பகுதிகளில் குறைந்து 10 அடிக்கு ஒரு சிறிய அளவிலான துவாரம் போட்டு குழாய் வழியாக மழைநீர் வடிகால் அமைப்புக்கு தண்ணீர் செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயரும் என்றார்.
இது போன்று பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
சென்னை குடிநீர் வாரிய நிலநீர் புவியியலாளர் எம். செüந்தரராஜன் கூறியது: மழைநீர் சேகரிப்பு அமைப்பு சென்னையில் சிறப்பாகச் செயல்படுகிறது. மழை நீர் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரிப்பது குறித்து மக்களின் கருத்துக்களைக் கேட்டறியவே ஒவ்வொரு மண்டலமாக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
சென்னையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பால், நிலத்தடி நீர் நிலையைக் கண்காணிக்க நகரின் பல்வேறு இடங்களில் 759 கண்காணிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர் நிலை வெகுவாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 2004-2009-ம் ஆண்டுகளில் நிலத்தடி நீர் நிலை 6 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 6 ஆண்களுக்கு முன்பு நிலத்தடி நீரில் கலந்துள்ள திடப் பொருளின் (உபயோகத்துக்கு லாயக்கற்ற) அளவு 5 ஆயிரம் பிபிஎம் (பார்ட்ஸ் பர் மில்லியன்) என்ற அளவில் இருந்தது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்பு இப்போது இது 300 பிபிஎம் என்ற அளவாக குறைந்துள்ளது.
ஒரு கிரவுண்ட் (2,400 சதுர அடி) இடத்தில் குறைந்தது 2 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் அமைப்புகள் அமைப்பது குறித்தும், பராமரிப்பது குறித்தும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மழைநீர் சேகரிப்புப் பிரிவுக்கு 044-2845 4080, 2845 1300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் வந்துவிட்டது. மழை நீரை வீணாக்காமல் சேகரிக்க ஒவ்வொருவரும் தயாராவோம் என்றார் செüந்தரராஜன்.