தினகரன் 18.05.2010
மழை பாதிப்பு பகுதியில் மேயர் ஆய்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு
பெங்களூர், மே 18: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மேயர் எஸ்.கே.நடராஜ், மீட்பு பணியை விரைந்து முடிக்கும் படி உத்தரவிட்டார்.
பெங்களூர் மாநகரில் ஞாயிறு மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மாநகரில் முக்கிய சாலைகளில் மரம் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் குடிசை அமைத்து வாழும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைக்கு சுவர் இடிந்ததில் அஞ்சனம்மா என்பவர் பலியாகினார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று காலை அதிகாரிகளுடன் சென்று மேயர் நடராஜ் பார்வையிட்டார். சுவர் இடிந்து பலியான அஞ்சனம்மாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். அரசின் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, மாநகரில் மழை நீர் செல்லும் கால்வாய்களை பார்வையிட்டார். அடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாய்களை உடனடியாக சரி செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பெருநகர் மாநகராட்சியின் 8 மண்டல அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது இன்னும் 3 மாதங்களுக்கு மழை நீடிக்கும். எனவே, மக்கள் பாதிப்புக்குள்ளாகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாநகரில் தொற்று நோய் பரவாமல் தவிர்க்கும் வகையில், கவனம் செலுத்த வேண்டும். மேலும் பேரிடர் தடுப்பு மையம், கண்காணிப்பு மையம், போலீஸ், தீயணைப்பு நிலையம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் வாழும் மக்களை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டால், பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நகரில் ஆங்காங்கே தண்ணீர் தேங்காமல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.