தினமணி 27.07.2010
மாடுகளை அறுக்கவும் இறைச்சிக் கூடம்
சேலம், ஜூலை 26: சேலத்தில் ஆடுகளை அறுக்க நவீன இறைச்சிக் கூடம் அமைத்ததைப் போல், மாடுகளை அறுப்பதற்கும் இறைச்சிக் கூடம் அமைக்க வேண்டும் என்று சூரமங்கலம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோகன் தலைமையில் சூரமங்கலம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சேலம் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் திங்கள்கிழமை ஒரு மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பது:
சேலம் சூரமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் கடந்த 85 ஆண்டுகளாக 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ–மாணவிகள், வேலைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகிறோம்.
இந்த நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மாடுகளை அறுத்து இறைச்சி வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவுகிறது. எனவே ஆடுகளை அறுப்பதற்கு இறைச்சிக் கூடம் அமைத்ததைப் போல் மாநகரின் ஒதுக்குப் புறத்தில் மாடுகளை அடிக்கவும் இறைச்சிக் கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுவரை குடியிருப்பு பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.