தினமணி 05.05.2010
மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணியை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு
மதுரை, மே. 4: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மேயர் கோ.தேன்மொழி உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலப் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்கிழமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் (பொறுப்பு) க.தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றுதல், தெருவிளக்கு அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் சார்பில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதில் கழிவு நீர் கலந்து வருவதை சரிசெய்யக்கோரி வந்த புகார் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.விஜயகுமார், நகரமைப்பு அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் சுப்பிரமணியன், நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதூர் கற்பக நகர் 7-வது தெருவில் உள்ள போர்வெல் தண்ணீரில் கழிவு நீர் வருவதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேயர் தேன்மொழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதையடுத்து, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து செல்லக் கூடிய சாலைகளை நெடுஞ்சாலத் துறை மூலம் சரி செய்யுமாறு தெரிவித்தார்.
மேலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் மார்க்கெட் பணிகளைப் பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.