தினமலர் 29.04.2010
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் விற்பனையில் கொள்ளை
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில், தண்ணீர் உட்பட அனைத்து பொருட்களையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.பஸ் ஸ்டாண்டில் ஸ்வீட் ஸ்டால், கூல்டிரிங்ஸ், டீக்கடை, ஓட்டல்கள் என நூற்றுக்கும் அதிகமான கடைகள் உள்ளன. கோடை வெயில் உச்சத்தை அடைந்துள்ளதால், இந்த கடைகளில் குடிநீர் (பாட்டில் தண்ணீர்) விற்பனை அமோகமாக நடக்கிறது. இவற்றிற்கு எவ்வித விலை கட்டுப்பாடும் இல்லை. அக்வாபினா ஒரு லிட்., தண்ணீர் பாட்டில் ரூ.15 (எம்.ஆர்.பி.,விலை) என பாட்டிலில் அச்சிடப் பட்டுள்ளது. ஆனால் ரூ.18க்கு விற்பனை செய்கின்றனர். இரண்டு லிட்டர் பாட்டில் விலை ரூ.22. இதனை ரூ.28 வரை விற்பனை செய்கின்றனர். கின்லே தண்ணீர் பாட்டில் விலை ரூ.14. ஆனால் ரூ.17 க்கு விற்கின்றனர். தண்ணீர் மட்டுமின்றி பிரபல கம்பெனிகளின் கூல்டிரிங்ஸ் விற்பனைகளிலும், இதே நிலை தான். ரூ.55க்கு விற்பனை செய்ய வேண்டிய இரண்டு லிட்., மிராண்டாவை ரூ.65க்கு விற்கின்றனர். மெரீனா பழச்சாறு கடை, வசந்தம் என ஒரு சில கடைகள் தவிர அனைத்து கடைகளிலும் இந்த முறைகேடுகள் அப்பட்டமாக நடக்கிறது.சில வியாபாரிகள் கூறியதாவது:
நாங்கள் கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை மட்டுமின்றி வேறு பணமும் கொடுக்கிறோம். மின்வெட்டால், பல மணிநேரம் ஜெனரேட்டர் ஓட்டும் நிலை உள்ளது. இது எங்களுக்கு கூடுதல் செலவு. விற்காத பொருட் களை, சப்ளை செய்யும் கம்பெனிகள் திருப்பி எடுத்துக் கொள்ளாது. இதனால் நஷ்டத்தில் இருந்து மீள, அதிக விலைக்கு விற்கிறோம் என்று ஒப்புக்கொள்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பல கடைகளில் மாநகராட்சி வழங்கிய அனுமதி எண்கள் எழுதப்படவில்லை. விளம்பர பலகைகளால் மறைத்து, கடையின் பெயர் கூட தெரியாமல் வைத்துள்ளனர். கடை எண், உரிமம் எண், வியாபாரி பெயர், பொருட்களின் விலைப்பட்டியல் தெரியும் வகையில் போர்டு வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் யாரும் பின்பற்றுவது இல்லை. பொதுமக்கள் எந்த பொருள் வாங்கினாலும் பில் கேட்டு வாங்க வேண்டும்.
யாரிடம் புகார் செய்வது : மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொருட்களை எம்.ஆர்.பி., விலையை விட கூடுதலாக விற்பது, கடும் நடவடிக்கைக்குரிய குற்றம். வாங்குபவர்கள் அதற்குரிய பில்லுடன் புகார் செய்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் புகார் செய்யலாம். 0452 – 253 2501 ல் தொடர்பு கொள்ளலாம். சுகாதாரமற்ற குடிநீரை விற்றால் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு போன் 0452- 253 1304 ல் புகார் செய்யலாம்.