தினமணி 04.09.2009
மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: ஆணையர்
சேலம், செப்.3: சேலம் மாநகராட்சிக்கு வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பது தொடர்பான கூட்டம் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி ஆணையர்கள் நெப்போலியன், தங்கவேல், உதவி வருவாய் அலுவலர்கள் ராஜா, ரங்கநாயகி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிவடைந்த பின் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் மாநகராட்சியில் வாகனம் மூலம் வரி வசூல் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சொத்துவரி, குடிநீர் கட்டணம் என கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மாநகராட்சிக்கு ரூ.3 கோடி வரி பாக்கி உள்ளது.
இதற்காக எதிர்வரும் 7-ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் உதவி ஆணையர் தலைமையில் பணியாளர்கள் 5 பேர், துப்புரவுப் பணியாளர்கள் 10 பேர் அடங்கிய குழுவினர் வரி வசூல் செய்யும் பணியை மேற்கொள்வார்கள்.
இதுகுறித்து ஒவ்வொரு கோட்டத்திலும் விளம்பரம் செய்யப்படும். 14 ஆயிரத்து 521 பேர் வீட்டு வரி செலுத்தாமலும், 6 ஆயிரத்து 126 பேர் குடிநீர் கட்டணம் செலுத்தாமலும் உள்ளனர். இவர்களுக்கு தொலைபேசி மற்றும் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வரி வசூல் செய்யும் தேதி குறித்து தகவல் தெரிவிக்கப்படும். இதற்கு மேலும் அவர்கள் வரி கட்டாமல் காலம் தாழ்த்தி வந்தால் அவர்களது குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றார்.