தினமணி 20.02.2010
மாநகராட்சித் தேர்தல் கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு மனு
பெங்களூர், பிப்.19: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலில் வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்க கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
÷மாநகராட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டு அரசு தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே
.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அப்தாப் ஆலம், எஸ்.எச்.கபாடியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அந்த மனுவை விசாரித்தது.
÷அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக எத்தனை முறைதான் உச்ச நீதிமன்றத்துக்கு வருவீர்கள்? உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல. ÷
தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே உங்களுக்கு (மாநில அரசுக்கு) சரியான உத்தரவு பிறப்பித்துள்ளோம். அவ்வாறு இருந்தும் மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்வது சரியான நடைமுறையல்ல. பள்ளி நடைபெறும் சமயத்தில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், வாக்குப்பதிவை ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நீதிபதிகள், மனு மீது உத்தரவுப் பிறப்பிக்காமல் பிப்ரவரி 22-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். ÷இதற்கிடையே ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி பிப்ரவரி 20-ம் தேதிக்குள் வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவித்து 22-ம் தேதிக்குள் அந்தப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
÷எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்க கால அவகாசம் கேட்டு மாநில அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்:÷தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மீண்டும் பிப்ரவரி 22-ம் தேதி எடுத்துக் கொள்கிறது. இந்தச் சூழ்நிலையில் உயர் நீதிமன்றம் அறிவித்தபடி பிப்ரவரி 20-ம் தேதிக்குள் இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்க முடியவில்லை. எனவே அப்பட்டியலை அறிவிக்க அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.