தினமலர் 01.06.2010
மாநகராட்சிப் பகுதிகளில் இன்று முதல்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி துவக்கம்
திருநெல்வேலி:மாநகராட்சிப் பகுதிகளின் அனைத்து வார்டுகளிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி இன்று முதல் துவங்குகிறது.இதுகுறித்து நெல்லை மாநகராட்சிக் கமிஷனர் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:நெல்லை மாநகராட்சியின் அனைத்து 55 வார்டு பகுதிகளிலும் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இன்று ஜூன் ஒன்றாம் தேதி முதல் துவங்குகிறது. இதற்காகக் கணக்கெடுப்பாளர்கள் வீடு தேடி வந்து விபரங்களைச் சேகரிப்பார்கள்.அவர்களிடம் பொதுமக்கள், வீட்டுப் பட்டியலில் பதிவு செய்ய வேண்டிய விபரங்களான 1. குடும்பத் தலைவர் பெயர், 2. குடும்பத்திலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மொத்த குடும்ப நபர்களின் எண்ணிக்கை, 3. வீட்டின் கட்டுமானப் பொருள், 4. குடிநீர் வசதி, சமையல் வசதி, கழிப்பிட வசதி போன்றவை, 5. குடும்பத்தின் வசமுள்ள பொருட்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், மொபட், கார், ஜீப், வேன், டிரான்சிஸ்டர் ரேடியோ, தொலைபேசி, கைபேசி, கணினி போன்றவை தெரிவிக்க வேண்டும்.
மேலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டிய விபரங்களான 1. குடும்பத் தலைவர் பெயர், 2. குடும்ப அங்கத்தினர்களின் பெயர், 3. ஒவ்வொரு நபரின் பிறந்த தேதி, திருமண நிலை, தொழில் நடவடிக்கை, தந்தை, தாயார், துணைவர் பெயர், பிறந்த ஊர், தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி போன்றவற்றை பொதுமக்கள், மேலே சொன்ன பிரகாரம் வீட்டுப் பட்டியலில் பதிவு செய்ய வேண்டிய விபரங்களையும், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டிய விபரங்களையும் முன்னதாக முழுமையாக சேகரித்து ஒரு வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதி அதனை தயாராக வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கணக்கெடுப்பாளர்கள் உங்கள் இல்லம் தேடி கணக்கு எடுக்க வரும் சமயம் தயாராக உள்ள மேலே சொன்ற விபரங்களை அவர்களிடம் கொடுத்து கணக்கு எடுப்புப்பணிக்கு முழு ஆதரவு தர கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முழுமையான அனைத்து விபரங்களையும் சரித்தன்மையுடன் விடுபடாமலும் இரட்டிப்பாகாமலும் கணக்கெடுப்பாளருக்கு விரைவாக வழங்கி இப்பணி குறிப்பிட்ட கால வரையறையான வரும் ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் முழுமையாக முடிவு பெற ஏதுவாக முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.