தினமணி 01.11.2010
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்
மதுரை, அக்.31: மதுரை மாநகராட்சி மற்றும் யூனியன் வங்கி இணைந்து, மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியருக்குக் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்கும் விழா இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை இயக்கிவைத்துப் பேசுகையில், மதுரை மாநகராட்சியும், யூனியன் வங்கியும் ஒருங்கிணைந்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு 14 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகிரப்பு சாதனம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, தல்லாகுளம் மேல்நிலைப் பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுந்தராஜபுரம் பள்ளி ஆகியவற்றில் இச்சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இளங்கோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மதுரை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93 சதவீதமாகும். வரும் ஆண்டுகளில் 100 சதம் தேர்ச்சி பெறவும், மாநில அளவில் முதலிடம் பிடிக்கவும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், யூனியன் வங்கி மேலாளர் முரளி, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.