மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய கனரா வங்கி
கோவையில் உள்ள 16 மாநகராட்சிப் பள்ளிகளிலும் முதல் 20 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியரின் உயர்கல்விக்காக கனரா வங்கி வியாழக்கிழமை கல்விக்கடன் ஆணையை வழங்கியது.
ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கல்விக்கடன் ஆணைகளை வழங்கிய மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
கோவை மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த 318 மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயிலுவதற்கு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து பள்ளிக்கு 20 பேர் வீதம் முன்னோடி வங்கியே தேர்வு செய்து கல்விக் கடன் ஆணை வழங்குகிறது.
பெற்றோரின் கடமையை நிறைவேற்றும் வகையிலும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் நோக்கம் நிறைவேறும் வகையிலும், அவர்களுக்கு கல்வி அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் மாநகராட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.
மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
கல்வியறிவே சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வை நீக்கும். எனவே மாணவர்கள் சிறந்த அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு நல்ல நிலையை குடும்பத்திற்கும், நாட்டிற்கும் உருவாக்க வேண்டும் என்றார் மேயர் செ.ம. வேலுசாமி.
மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், மாநகராட்சி ஆணையர் க.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற ஆர்.இந்துமதிக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற ஜே.மோகனாம்பாளுக்கு ரூ. 7,500, மூன்றாமிடம் பெற்ற எஸ்.சூர்யா, எஸ்.வெங்கடேஷ் ஆகியோருக்கு தலா ரூ. 5,000 வீதம் ரொக்கப் பரிசுகள் கனரா வங்கி சார்பில் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர் துரை, துணை மேயர் லீலாவதி உண்ணி, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராம், பி.ராஜ்குமார், பி சாவித்திரி, சுகாதாரக்குழுத் தலைவர் எஸ்.தாமரைச் செல்வி, கல்விக்குழுத் தலைவர் ஆர்.சாந்தாமணி, நியமனக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், எஸ்.மணிமேகலை ஆகியோர் பங்கேற்றனர்.