தினமலர் 05.02.2010
மாநகராட்சியாக்க நகராட்சியில் தீர்மானம்
திருவள்ளூர்:”பலரது உழைப்பும், முயற்சியும் இருந்தால் தான் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும்‘ என திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., சிவாஜி தெரிவித்தார்.திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்றக் கூட்ட அரங்கம் 20 லட்ச ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி, புதிய இருக்கைகள், அழகான மண்டபம் என புது பொலிவுடன் சீரமைக்கப் பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவில் தொகுதி எம்.எல்.ஏ., இ.ஏ.பி.,சிவாஜி கலந்து கொண்டு புதிய அரங்கை திறந்து வைத்தார்.அவர் பேசுகையில்,”நகராட்சி உறுப்பினர்கள் இங்கு அமர்ந்து சிறப்பாக செயல் பட நல்ல சூழ்நிலை அமைய வேண் டும்.இப்போது இங்கு சிறந்த சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் சிறப்பாக மக்கள் தொண் டாற்ற முடியும். பலரது உழைப்பும், முயற்சியும் இருந்தால் தான் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும்‘ என்றார்.
விழாவில், நகராட்சித் தலைவர் பொன்.பாண்டியன், திருவள்ளூர் ஊராட்சித் தலைவர் வி.எஸ். சண்முகம், முன்னாள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பின் நடந்த முதல் நகர்மன்றக் கூட்டத்தில், “திருவள்ளூர் நகராட்சியைச் சுற்றி உள்ள பிற நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து திருவள்ளூர் மாநகராட்சி உருவாக்கப்பட வேண்டும்.
நகரில் பிளாஸ்டிக் கப், பை ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து பேப்பர் கப், பை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என இரு தீர்மானங்கள் நிறைவேறியது.