தினமணி 04.09.2010
மாநகராட்சியின் வார்டுகள் அதிகரிக்கப்படும்
சேலம், செப். 3: சேலம் மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
÷சேலம் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், மாநகராட்சி பொது நிதி, சேலம் 2-வது தொகுதி எம்.எல்.ஏ. வளர்ச்சித் திட்ட நிதி ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பணிகளை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறியது:
÷சேலம் மாநகராட்சிப் பகுதியில் தற்போது 60 வார்டுகள் உள்ளன. சேலம் மாநகரின் மக்கள்தொகை அதிகரித்து வருவதாலும், ஒவ்வொரு வார்டும் மிகப் பெரியதாக இருப்பதாலும் நிர்வாகம் செய்வதில் சிறிய குறைபாடுகள் உள்ளன. இதனால் இப்போது உள்ள 60 வார்டுகளை 72 முதல் 75 வார்டுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அனேகமாக வரும் உள்ளாட்சித் தேர்தலுக்குள் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இருப்பினும் மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
சரக்கு போக்குவரத்து தொடங்கியது
சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு கிங் பிஷர் விமான நிறுவனம் மூலம் தினசரி விமான சேவை நடைபெற்று வருகிறது. சேலத்தில் இருந்து சென்னை செல்பவர்கள் அங்கிருந்து மும்பைக்குச் செல்லும் வகையில் இப்போது பயணத்திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பயணிகள் சேவையுடன் சரக்கு போக்குவரத்தும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை சேலத்தில் இருந்து 100 கிலோ மல்லிகைப் பூ விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜவுளித் தொழிலும், மலர்கள் சாகுபடியும் பிரதான தொழிலாக இருப்பதால் சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து நாள்தோறும் சுமார் ஒரு டன் வரையிலான பொருள்களை சென்னை, மும்பைக்கு கொண்டுச் செல்ல முடியும். இது படிப்படியாக அதிகரிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் சேலம் – சென்னை இடையே காலையில் விமான சேவை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து கிங் பிஷர் விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி தினசரி காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம், 8.30 மணிக்கு சேலம் வந்து சேரும் வகையிலும், அதே சமயம் சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் வகையிலும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளுக்கும், விமான நிறுவனத்துக்கும் காலை நேரத்தில் விமானம் இயக்குவது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இத்திட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக கிங் பிஷர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது என்றார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
÷சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார், மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.