மாநகராட்சியில் ஓட்டுநர் பணியிடத்துக்கு பதிவுமூப்பு பரிந்துரை
மதுரை மாநகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள ஓட்டுநர் பணியிடத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பதிவுமூப்பு விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக்கொள்ள இன்று இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பா.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேற்படி ஓட்டுநர் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நாளது தேதிவரை புதுப்பித்துள்ள கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், 1.1.2013 ஆம் தேதி எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி.க்கு 35 வயதுக்குள்ளும், எம்.பி.சி., பி.சி., பி.சி. முஸ்லிம்களுக்கு 32 வயதுக்குள்ளும், ஓ.சி.க்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இப்பணிக்கு பரிந்துரை செய்யப்படவில்லை.
முன்னுரிமை அற்றவர்களில் எஸ்.சி. ஏ வகுப்பினருக்கு 29.1.2003, எஸ்.சி. பொது வகுப்பினருக்கு 4.10.2011, எம்.பி.சி. வகுப்பினருக்கு 22.7.2010, பி.சி. முஸ்லிம் வகுப்பினருக்கு 1.9.2008, பி.சி. பொது வகுப்பினருக்கு 5.1.2007, ஓ.சி. பொது வகுப்பினருக்கு 5.7.2010 வரையிலும், முன்னுரிமை உள்ளவர்களுக்கு அனைத்து வகை முன்னுரிமை உள்ளவர் (அனைத்துப் பிரிவினர்) கலப்புத் திருமணச் சான்று பதிவுதாரர்கள் நீங்கலாக 17.1.2013 வரையிலும், பகிரங்கப் போட்டியாளர் முன்னுரிமை பிரிவில் மதுரை மாநகராட்சி எல்கைக்கு உட்பட்டு போதிய மனுதாரர்கள் இல்லாத காரணத்தினால், முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள மதுரை மாவட்ட பதிவுதாரர்களில், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தவர், மொழிப்போர் தியாகி, தமிழ்மொழிக் காவலர் 18.8.2011 பதிவுமூப்பு உடைய மனுதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கல்வித்தகுதி மற்றும் பதிவு மூப்புக்குள்பட்ட, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, மாநகராட்சி எல்கைக்கு உள்பட்டு வசிக்கும் பதிவுதாரர்கள் மட்டும் அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல், முன்னுரிமை சான்றுடன் பிப்.26 ஆம் தேதி நேரில் வந்து பதிவுமூப்பினை சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் பெறப்படும் முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.