மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த காலநீட்டிப்பு இன்றுடன் முடிகிறது
கோவை: மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை தொகை செலுத்த இன்றுடன் காலநீட்டிப்பு நிறைவடைகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு 2012-13ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்துக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேட்பு தொகைகளை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல் மையங்கள் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்பட்டன.
மார்ச் மாதத்தின் கடைசி மூன்று தினங்கள் அரசு விடுமுறை நாளாக அமைந்து விட்டதால், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சொத்து வரிதாரர்கள் வரி செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, கால நீட்டிப்பு வழங்கக்கோரி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதைத்தொடர்ந்து, 1.4.2013 முதல் 5.4.2013 வரை ஐந்து தினங்கள் காலநீட்டிப்பு செய்து, வரி வசூல் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த கால நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில், சொத்து வரி ரூ.45 லட்சத்து 13 ஆயிரத்து 959, குடிநீர் கட்டணம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 984, வாட் வரி ரூ.26 லட்சத்து 12 ஆயிரத்து 581 உள்பட பல்வேறு கட்டணங்கள் சேர்த்து மொத்தம் ஒரு கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 508 ரூபாய் வசூலாகியுள்ளது. இதுவரை, 89 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவை தொகையையும் விரைவில் வசூலித்து 100 சதவீத இலக்கை எட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கமிஷனர் லதா கூறுகையில், ‘‘பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது அனைத்து நிலுவை வரிகளையும் உடனடியாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம். குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வேண்டுகிறோம்‘‘ என்றார்.