தினமலர் 08.09.210
மாநகராட்சியில் நாய், பன்றி பிடிக்கும் பணி நீண்ட நாள் கழித்து மீண்டும் துவக்கம்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள் கழித்து நேற்று மீண்டும் நாய் மற்றும் பன்றிகள் பிடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். சேலம் மாநகரின் பல இடங்களில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு “கு.க.,’ மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். சேலம் மாநகராட்சியில் நாய்களை பிடித்து கு.க., செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சேலம் மாநகராட்சியில் நாய்களை பிடிப்பதில் சுகாதார பிரிவு அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டனர். நாய் கடியால் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.
தெரு நாய்களை போலவே, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட பல இடங்களில் பன்றி தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, நீண்ட நாள் கழித்து நேற்று,” கண் விழித்த‘ மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் திடீரென்று நாய் மற்றும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள 45 வது வார்டுக்குட்பட்ட ராமலிங்க மடாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 15 பன்றிகள் பிடிக்கப்பட்டது. அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 20 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி பிடித்தனர். மாநகர பகுதியில் தொடர்ந்து நாய்களை பிடித்து அவற்றுக்கு கு.க., செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் வளர்க்கப்படும் பன்றிகளை அப்புறப்படுத்த முன் வர வேண்டும்.