மாநகராட்சியில் பட்ஜெட் தயாரிக்கும் பணி ஜரூர்
சேலம்: சேலம் மாநகராட்சியில், நடப்பு, 2013-14 ம் ஆண்டு, பட்ஜெட் தயாரிக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. மலிவு விலை உணவகம், மெகா பட்ஜெட் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, பொதுமக்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, 2012-13 ம் ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டில், சேலம் அஸ்தம்பட்டி செரிரோடு ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை, செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் ரயில்வே மேம்பாலம், பழைய சூரமங்கலம் ரயில்வே மேம்பாலம், சேலம் அணைமேடு ரயில்வே மேம்பாலம் கட்டுவது.புது பஸ் ஸ்டாண்டில், உயர் மட்ட நடை மேம்பாலம், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சுரங்கப்பாதை, எருமாப்பாளையம் குப்பை மேட்டில், ஒன்பது கோடியே, 17 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைத்தல், அரபிக் கல்லூரி சாலையில் இருந்து அம்மாப்பேட்டை, தாதம்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணம் வரை பைபாஸ் சாலையுடன் இணைத்திடும் ரிங்ரோடு, நடமாடும் மருத்துவ வாகனம், திருச்சி மெயின்ரோட்டை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதற்கான பூர்வாங்க பணிகள் கூட துவங்கப்படவில்லை. மாநகராட்சி சாலைகளில், பெயர் பலகை வைத்தல், பிளாஸ்டிக் சாலை அமைத்தல், சூரமங்கலத்தில் மீன் மார்க்கெட் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் ஆகிய பணிகள் செயல் துவங்கியும், செயல் வடிவம் பெற்றும் வருகிறது.நடப்பு, 2013-14 ம் ஆண்டுக்கான, மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மாநகராட்சியில், சுகாதாரம் மற்றும் குடிநீர் பிரச்னை தவிர்த்து, மாநகர மக்கள் போக்குவரத்து பிரச்னையால், அதிகம் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பட்ஜெட்டில், மேற்படி திட்டங்களுக்க அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கடந்த பல ஆண்டுகளுக்கு முன், சேலம் மாநகராட்சியில், அறிவிக்கப்பட் பாதாளசாக்கடை திட்டம், தனிக்குடிநீர் திட்டம், திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டம் ஆகிய மெகா பட்ஜெட் திட்டங்கள் தான், தற்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. எனவே, அதைப்போன்ற, சேலம் மாநகராட்சியில், புதிதாக மெகா பட்ஜெட் திட்டங்கள் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியில், செயல்பட்டு வருவதை போல, மலிவு விலை உணவகம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.