தினமலர் 28.04.2010
மாநகராட்சியில் மக்கள் குறை கேட்பு கூட்டம்
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர்கள் கேசவன், சுல்தானா, பாஸ்கர், சாந்தி, உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பாளை., நேச நயினார் தெரு பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். பெண்கள் பயன்படுத்தி வந்த கழிப்பிட கட்டடம் இடிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய கழிப்பிடம் கட்ட இடத்தை தேர்வு செய்து தரக்கேட்டனர். அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தை கழிப்பிடம் கட்ட தேர்வு செய்துள்ளோம். ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் நல்ல வசதியான கழிப்பிடம் கட்டித் தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.’
நெல்லை கருப்பந்துறை விளாகம் பகுதியை சேர்ந்தவ குலாம் ரசூல் உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், ‘விளாகம் பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. அந்த குடிநீர் தொட்டியில் மோட்டாரை போடும் போது ஷாக் அடிக்கிறது. இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அதில் உள்ள மின் கசிவை சரிசெய்து சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.’ இதுபோல குடிநீர் வசதி, ரோடு வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் மனுக் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.