தினமலர் 16.08.2010
மாநகராட்சியுடன் விளாச்சேரியை இணைக்க எதிர்ப்பு
திருப்பரங்குன்றம்: “மதுரை மாநகராட்சியுடன், விளாச்சேரி கிராமத்தை இணைக்கக் கூடாது‘ என, கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காமராஜிடம், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விளாச்சேரியில், கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் மரகதவள்ளி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினார். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், “விளாச்சேரியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. இணைத்தால், 100 நாட்கள் வேலை உட்பட பல்வேறு சலுகைகள் எங்களுக்கு கிடைக்காது‘ என்றனர். கலெக்டர் பேசும்போது, “”கோரிக்கை நிறைவேற்றப்படும். மாநகராட்சியுடன் இணைப்பு பிரச்னையில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது. ஊரை சுத்தமாக வைத்திருங்கள். மழை காலம் தொடங்கி விட்டதால் நோய்கள் பரவும், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாதீர்கள்,” என்றார்.ஒன்றிய கவுன்சிலர் இந்திரா, “”கலைஞர் நகரில் ரோடு,மின்விளக்குள், பஸ், குடிநீர், ரேஷன் கடை வசதிகள் செய்து தர வேண்டும்” என கலெக்டரிடம் மனு கொடுத்தார்.