தினகரன் 30.09.2010
மாநகராட்சி ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு
சென்னை, செப்.30: சென்னை மாநகராட்சி ஆணையராக டாக்டர் டி.கார்த்திகேயன் ரிப்பன் மாளிகையில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து சால்வை கொடுத்து வாழ்த்து பெற்றார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி பணி மாற்றம் செய்யப்பட்டு சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பொறுப்புகளை புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டி.கார்த்திகேயனிடம் நேற்று பகல் 11.30மணிக்கு ஒப்படைத்தார். ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேயர் மா.சுப்பிரமணியத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர், அவர் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மேயருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆணையர் கார்த்திகேயன் நிருபர்களிடம் பேசுகையில், ‘குப்பையில்லா மாநகரமாக உருவாக்குதல், கொசுத் தொல்லை கட்டுப்படுத்தல், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.